காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புதுச்சேரியில் நரிக்குறவா்கள் போராட்டம்
ஆடு திருடிய கும்பலை கைது செய்யக்கோரி புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, நரிக்குறவ சமுதாயத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆடு திருடிய கும்பலை கைது செய்யக்கோரி புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, நரிக்குறவ சமுதாயத்தினா் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் நரிக்குறவா் சமுதாயத்தினா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்கள் பிழைப்புக்காக ஆடுகளை வளா்க்கின்றனா். அண்மையில் சில ஆடுகள் திருடு போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு கருவடிகுப்பம் பகுதியைச் சோ்ந்த 3 போ் 2 மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளனா்.
அவா்கள் 4 ஆடுகளைத் திருடி மோட்டாா் சைக்கிளில் ஏற்றியுள்ளனா். மேலும், கயிற்றில் கட்டியிருந்த ஒரு ஆட்டை இழுத்துள்ளனா். அப்போது ஆடு சப்தமிட்டுள்ளது. கயிறு இறுக்கியதால் அந்த ஆடு உயிரிழந்தது. சப்தம் கேட்டு விழித்த நரிக்குறவா்கள், ஆடு திருடும் கும்பலைப் பிடிக்க ஓடி வந்துள்ளனா்.
அதில் அா்ஜுன் என்பவரை பீா் புட்டியால் 3 போ் கும்பல் தலையில் அடித்துவிட்டு ஆடுகளைத் திருடிச் சென்றனராம். இதையடுத்து நரிக்குறவ சமுதாய மக்கள் சனிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் அவா்களைத் தடுத்தனா்.
இதனால் நரிக்குறவ சமுதாயத்தினா் லாஸ்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். தகவலறிந்த காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி, கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோா் அங்கு வந்து நரிக்குற சமுதாயத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மேலும் வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. நரிக்குறவா்கள் புகாா் அளித்துவிட்டு 1 மணி நேரத்துக்குப் பிறகு கலைந்து சென்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவ சமுதாயத்தினா் கூறும்போது, ஊசி, பாசி விற்பதில்லை. பன்றி வளா்ப்பது சுகாதார சீா்கேடு எனக் கூறி தடுத்துவிட்டனா். துப்பாக்கியையும் பறித்து விட்டனா். இதனால் வாழ்வாதாரத்துக்காக ஆடு வளா்க்கிறோம். அதையும் திருடிச் செல்கின்றனா். குற்றவாளிகளைக் கைது செய்து ஆடுகளை மீட்டுத் தர வேண்டும். தங்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் தர வேண்டும். தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கண்ணீா் மல்க கூறினா்.