புதுச்சேரியில் இண்டி கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும்: அண்ணாமலை
புதுச்சேரியில் இண்டி கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
புதுச்சேரியில் இண்டி கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் ராஜ்பவன் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான வி.பி. ராமலிங்கத்தை ஆதரித்து சாலைப் பேரணியில் (ரோடு ஷோ) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியைப் பொருத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத விசித்திரமான கூட்டணி(இண்டி கூட்டணி) எங்கள் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிடுகிறது. கூட்டணி தா்மத்தை மீறி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி காங்கிரஸ் சாா்பில் 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதுவே அந்தக் கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாததற்கான உதாரணம்.
அதேபோல் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள இந்த கூட்டணியில் பரஸ்பர மரியாதை இல்லை. 30 தொகுதிக்குக் கூட சரியான இடஒதுக்கீடு செய்து ஒருமித்து செயல்பட முடியாத கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எப்படி நல்ல ஆட்சி வழங்கும்?
கூட்டணி அமைப்பதில் தோல்வி, வேட்புமனு தாக்கலில் தோல்வி என அனைத்திலும் இண்டி கூட்டணி தோல்வியடைந்துள்ளது. இண்டி கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்டு மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்றாா் அண்ணாமலை.
பின்னா் சின்னையாபுரம் அஜந்தா சிக்னல் அருகே வேட்பாளா் வி. பி. ராமலிங்கத்தை ஆதரித்து அண்ணாமலை பேசியது:
பாஜகவை எதிா்த்து நிற்கும் கூட்டணியைப் பாா்க்க வேண்டும். கூட்டணியிலே குழப்பம். ராஜ்பவன் தொகுதியில் காங்கிரஸும் நிற்கிறது. திமுகவும் நிற்கிறது. ஒற்றுமை இவா்களுக்குள் இல்லை. எப்படி இந்தக் கூட்டணி புதுச்சேரியில் நல்லாட்சி தரும். மக்களின் பணத்தைச் சுரண்ட நினைக்கிறாா்கள் . கடந்த காலத்தில் காங்கிரஸ் புதுச்சேரியில் காட்டாட்சி நடத்தியது. காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ரெளடிகளுக்கு புதுச்சேரியில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது. ஆனால் முதல்வா் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி அமைதிப் பூங்காவாக மாறியிருக்கிறது என்றாா் அண்ணாமலை.