காவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சியை எஸ்.பி. ஜெயக்குமார் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சியை எஸ்.பி. ஜெயக்குமார் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 13,183 பேர் இரண்டாம் நிலைக் காவலர்களாக புதிதாக பணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கான 7 மாத அடிப்படைப் பயிற்சி தமிழகம் முழுவதும் 41 இடங்களில் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் காகுப்பம், ஆயுதப் படை தாற்காலிக பயிற்சி மையம், மயிலத்தில் உள்ள காவலர் நிரந்தர பயிற்சி மையம், உளுந்தூர்பேட்டை பட்டாளியன் மையம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், விழுப்புரத்தில் 250, மயிலத்தில் 450 பெண் காவலர்களும், உளுந்தூர்பேட்டையில் 500 ஆண் காவலர்களும் பயிற்சி பெற உள்ளனர். உடல் திறன், உளவியல், சட்டம் குறித்து, நன்னடத்தை, காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை அணுகுவது, விரல் ரேகை பதிவு செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். விழுப்புரத்தில் இந்த பயிற்சி வகுப்பை அந்த பயிற்சி மையத்தின் முதல்வரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான எஸ்.பி. ஜெயக்குமார் தொடக்கி வைத்து பேசியதாவது:
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது, நிகழ்ந்த குற்றங்களை கண்டறிவது, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது ஆகியன காவல்துறையின் பிரதான பணிகளாகும். இதுதவிர குடிநீர் வரவில்லை, சாலை சரியில்லை என பொதுமக்கள் போராட்டம், மறியல் செய்தால், அங்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி பிரச்னையை தீர்க்க முயல்பவர்களாக காவல் துறையினர் இருக்க வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் பாகுபாடு காட்டக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இந்த பயிற்சியைத் தொடர்ந்து, காவல் நிலையங்களில் ஒரு மாதம் களப் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.