விழுப்புரம்

விழுப்புரம், செஞ்சி பகுதி கோயில்களில் கும்பாபிஷேகம்

DIN

விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோயில், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த முக்குணம் உமையவள் உடனுறை முக்குன்றநாதர் உடையார் கோயில், நெகனூர் பொன்னியம்மன் உடனுறை பொன்னிபுரீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம் நேருஜி சாலையில் அமைந்துள்ள வீரவாழி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த திங்கள்கிழமை கணபதி, முதல் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, வீரகணபதி வழிபாடு, மூன்றாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, புதன்கிழமை காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் வீரவாழி அம்மன், பரிவார மூர்த்திகளுக்கு ரக்ஷôபந்தனம் நடைபெற்றது.
காலை 9 மணி அளவில் பூர்ணாஹுதி,  தீபாராதனை நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீரவாழி மாரியம்மன் கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பரிவார மூர்த்திகளின் கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையடுத்து, வீரவாழி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இரவு மலர் அலங்காரத்தில் உத்ஸவர் வீரவாழி அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, சித்திரை பௌர்ணமி வழிபாடுகளும் நடைபெறுகின்றன. 
முக்குணம்: செஞ்சி வட்டம், முக்குணம் கிராமத்தில் அமைந்துள்ள உமையவள் உடனுறை முக்குன்றநாதர் உடையார் கோயிலில் புதிதாக விநாயகர், ஆஞ்சநேயர், ஹயக்கிரீவர், காலபைரவர், சனீஸ்வரன் சந்நிதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த சந்நிதிகளுக்கான மகா கும்பாபிஷேகம் செவ்வாய்க்கிழமை காலை கோ பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கணபதி, லட்சுமி பூஜை, நவக்கிர ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், புதன்கிழமை காலை இரண்டாம் காலை யாக சாலை பூஜையும், மகாபூர்ணாஹுதியும் நடைபெற்றன. காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு, கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
இதையடுத்து, உமையவள் உடனுறை முக்குன்றநாதர், பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  
நெகனூர்: செஞ்சி வட்டம், நெகனூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் உடனுறை பொன்னிபுரீஸ்வரர், நவக்கிர கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு, புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், பொன்னியம்மன் உடனுறை பொன்னிபுரீஸ்வரர், நவக்கிரங்களுக்கு மகா அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT