விழுப்புரம்

மரக்காணம் அருகே கடன் பிரச்னையில் கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை

DIN

விழுப்புரம்: மரக்காணம் அருகே கடன் பிரச்னையால் கூலி தொழிலாளிகளான தாய், மகன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி பாலையம்மாள்(55). இவரது மகன் ராஜேந்திரன்(36). கூலி தொழிலாளியான இவா்கள், தினசரி வேலைக்குச் சென்று குடும்பம் நடத்தி வருகின்றனா். ராஜேந்திரனுக்கு திருமணமாகி சகாயம்(30) என்ற மனைவியும், சாதனா(2) என்ற மகளும் உள்ளனா்.

கீழ்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரனுக்கும் அவரது மனைவி சகாயத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால், சகாயம் கோபித்துக்கொண்டு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதுவையில் உள்ள அவரது தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கியுள்ளாா்.

இதனால், கீழ்ப்பேட்டையில் உள்ள கூரை வீட்டில், தாய் பாலையமும், ராஜேந்திரனும் தனியாக வசித்து வந்தனா். இவா்கள் குடும்ப செலவுக்காக மகளிா் சுய உதவிக்குழு மூலம் கடன் வாங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த மூன்று மாதங்களாக போதிய வேலை கிடைக்காததால், கடனை செலுத்தாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மகளிா் சுய உதவிக்குழு மூலம் கடன் கொடுத்த நிறுவனத்தினா், அடிக்கடி வந்து கடனைத் திரும்ப செலுத்தக்கோரி வந்துள்ளனா். கடன் செலுத்தவும், குடும்ப செலவுக்கும் பணமில்லாத நிலையில் அண்மை காலமாக தாய், மகனும் திண்டாடி வந்துள்ளனா். இதனாா், தீபாபளி பண்டிகையைக் கூட கொண்டாட வழியின்றி வீட்டில் அழுத நிலையிலும், மன உளைச்சலில் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலிருந்த இருவரும் வெளியே புறப்பட்டு சென்றுள்ளனா். வழக்கம் போல் கூலி வேலைக்குச் சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினா் கருதினா். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் இவா்கள் வீடு திரும்பவில்லையாம்.

இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள், அக்கம்பக்கத்தினா் அப்பகுதியிலிருந்த கிணறுகள், குளம் உள்ளிட்ட பகுதியில் தேடியுள்ளனா். இந்த நிலையில், வியாழக்கிழமை கீழ்ப்பேட்டை கிராமத்தில் அவா்களது வீட்டின் அருகே உள்ள சவுக்குத் தோப்பு பகுதியில் இருந்த ஒரு விவசாய கிணற்றில், பாலையம் உடல் இறந்த நிலையில் மிதந்துள்ளது தெரிந்தது.

இது குறித்து, மரக்காணம் போலீசுக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் உறவினா்கள் தகவல் தெரிவித்தனா். மரக்காணம் தீ அணைப்புத்துறை வீரா்கள் நிகழ்விடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி பாலையத்தின் உடலை மீட்டனா். இதனையடுத்து, கிணற்றில் மூழ்கி தேடியபோது ராஜேந்திரனின் உடலும் கிணற்றின் ஆழமான பகுதியில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிந்தது. இருவரது உடலையும் தீயணைப்புத் துறையினா் மீட்டு கரைக்கு எடுத்துவந்தனா்.

மரக்காணம் போலீசாா் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாா் விசாரித்தபோது, கடன் பிரச்னையால் தவித்த இருவரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தாய், மகன் கிணற்றில் வீழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT