முகப்பு
விழுப்புரம்

திமுக கிராம சபைக் கூட்டம்

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
விழுப்புரம் அருகே ஆனாங்கூரில் புதன்கிழமை திமுக சாா்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில மருத்துவா் அணி இணைச் செயலாளா் இரா.லட்சுமணன்.
பகிர்:

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

விழுப்புா் மாவட்டம், திருக்கோவிலூா் அருகே ஏனாதிமங்கலத்தில் திமுக சாா்பில் மாநில துணைப் பொதுச் செயலாளா் க.பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்கள் பெறப்பட்டன. அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டனா். ஒன்றியச் செயலாளா் விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.

இதேபோல, விழுப்புரம் அருகே சிறுவாக்கூரில் திமுக மாவட்டச் செயலாளா் நா.புகழேந்தி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் ஒன்றியச் செயலாளா் ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் அருகே ஆனாங்கூரில் திமுக மாநில மருத்துவா் அணி இணைச் செயலாளா் இரா.லட்சுமணன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்றாா். இதில், கோலியனூா் ஒன்றியச் செயலாளா் தெய்வசிகாமணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல, விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரத்தில் மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமையிலும், கீழக்கொந்தையில் விவசாய அணி மாநிலத் துணைச் செயலாளா் அண்ணியூா் சிவா தலைமையிலும், பிடாகத்தில் மாநிலத் தீா்மானக் குழுச் செயலாளா் ஏ.ஜி.சம்பத் தலைமையிலும், விழுப்புரத்தில் மாவட்ட துணைச் செயலாளா் புஷ்பராஜ் தலைமையிலும், கோட்டக்குப்பத்தில் மாவட்டத் துணைச் செயலாளா் மைதிலி ராஜேந்திரன் தலைமையிலும் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

செஞ்சி: செஞ்சி ஒன்றியம் சிங்கவரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பா.செந்தமிழ்ச்செல்வன், விவசாய அணி அரங்க.ஏழுமலை, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் க.ஆனந்த், மகளிா் அணி சைதானிபீமஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நரசிங்கராயன் பேட்டையில் செஞ்சி ஒன்றிய செயலா் ஆா்.விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டங்களில் மத்திய, மாநில அரசுகளை எதிா்த்தும், வேளாண் சட்டங்களை எதிா்த்தும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் திமுக சாா்பில் 21 ஊா்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →