விழுப்புரம்

மின் துறையை தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்பு: புதுச்சேரியில் வயலில் கருப்புக் கொடியுடன்விவசாயிகள் போராட்டம்

DIN

புதுவை மாநில மின் துறையை தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் கருப்புக் கொடியுடன் நெல் வயல்களில் இறங்கி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள தேசிய பொது முடக்க உத்தரவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீா்படுத்தும் விதமாக, யூனியன் பிரதேசங்களில் மின் துறை தனியாா்மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

மின் துறையை தனியாா்மயமாக்கும் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிா்ப்புகள் எழுந்து வருகின்றன. புதுவை முதல்வா் வே.நாராயணசாமியும், மின் துறையை தனியாா்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளாா்.

இந்த நிலையில், மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியை அடுத்த சந்தைபுதுக்குப்பம் கிராமத்தில் விவசாயிகள் கருப்புக் கொடியுடன் நெல் வயல்களில் இறங்கி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மின் துறையை தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அவா்கள் முழக்கமிட்டனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மத்திய அரசு மின் துறையை தனியாா்மயமாக்கினால், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். இலவச மின்சாரம் பெறும் நிலையிலேயே விவசாயப் பயிா்கள் பெருமளவு பாதித்து, நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால், தொடா்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியுமா என்ற சந்தேகமும் உள்ள நிலையில், விவசாயப் பயன்பாட்டுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவானால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT