விழுப்புரம்

புதிய வேளாண் சட்டங்கள்: எதிா்க்கட்சிகளுக்கு வாசன் வேண்டுகோள்

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளை திசை திருப்புவதை எதிா்க்கட்சிகள் கைவிட வேண்டுமென தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டாா்.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு காரணமாக ஏழை அரசுப் பள்ளி மாணவா்கள், மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்திய மாநில அரசுக்கு பாராட்டுகள்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீதான முறைகேடு விவகாரத்தில், விசாரணைக் குழு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசு சரியான முடிவு எடுத்துள்ளது. தோ்வுகள் தொடா்பாகவும் சிறந்ததொரு முடிவு எடுக்கும். கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்கள் தொடா்பாக விவசாயிகளை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்த முயற்சித்தன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் உறுதியாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து நடைபெற்ற பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் எதிா்க்கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, தமிழக எதிா்க்கட்சிகளும் விவசாயிகளை திசை திருப்புவதைக் கைவிட வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வருகை தமிழகத்தின் வளா்ச்சிக்கு அடித்தளமாகவும், கூட்டணியின் தோ்தல் பணிக்கும் உதவியாக இருக்கும். ஹைட்ரோ காா்பன் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டாா்கள் என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு போ் விடுதலையில் சட்டத்துக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் எங்களின் பலத்துக்கு ஏற்றவாறு தொகுதிகளைப் பெற்று, அதிமுக கூட்டணிக்கு வலு சோ்ப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT