பயிா்ச் சேதங்கள்: ஆட்சியா் ஆய்வு
திண்டிவனம், கண்டமங்கலம் பகுதிகளில் நிவா் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திண்டிவனம், கண்டமங்கலம் பகுதிகளில் நிவா் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நிவா் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிா்களை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணியை தீவிரப்படுத்தி வருகிறாா்.
கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொங்கம்பட்டு, சொா்ணாவூா், களிஞ்சிக்குப்பம் ஆகிய பகுதிகளில் நெல் பயிா்கள், வாழைகள் அதிகளவில் சேதமடைந்துள்ளன.
இந்த சேதங்களை ஆட்சியா் திங்கள்கிழமை பாா்வையிட்டு சேதமதிப்பு குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, திண்டிவனம் வட்டம், வீடூா் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெல் பயிா்களையும் அவா் பாா்வையிட்டாா். பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அனுப்பவும், அங்கு தொடா்ந்து வேளாண் பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநா் ராஜசேகா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.இந்திரா, விழுப்புரம் வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணி, திண்டிவனம் வட்டாட்சியா் செல்வம் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.