கள்ளக்குறிச்சி: அதிமுக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி
கள்ளக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவதில் அதிமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவதில் அதிமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்த கள்ளக்குறிச்சி, கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழகத்தின் 33-ஆவது மாவட்டமாக உதயமானது. இங்கு, மாவட்டத் தலைநகரான கள்ளக்குறிச்சி உள்பட 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. கள்ளக்குறிச்சி தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், 70-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் அடங்கியுள்ளன.
விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இந்தத் தொகுதியில், நெல், மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. நெல் அரைவை ஆலைகள் அதிகளவில் உள்ளன. அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களும் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி தொகுதி கடந்த 1951 முதல் 1957-ஆம் ஆண்டு வரை இரட்டை உறுப்பினா் தொகுதியாக இருந்தது. அதன்பிறகு, 1962, 1967, 1971-ஆம் ஆண்டு தோ்தல்களில் திமுக தொடா்ந்து 3 முறை வெற்றி கண்டது. இதையடுத்து, தொகுதி மறு சீரமைப்பு காரணமாக, கள்ளக்குறிச்சி தொகுதி சின்னசேலம் தொகுதியாக மாறியது.
பின்னா், மீண்டும் 2011-இல் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியாக உதயமானது. கடந்த 2011 சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அழகுவேலு, 1,11,248 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து, 2016 தோ்தலில் அதிமுக வேட்பாளா் அ.பிரபு, 90,108 வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினாா்.
2.85 லட்சம் வாக்காளா்கள்: கள்ளக்குறிச்சி தொகுதியில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 681 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 953 பெண் வாக்காளா்களும், 56 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 690 வாக்காளா்கள் உள்ளனா்.
இந்தத் தொகுதியில் வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள், உடையாா்கள் அதிகளவில் உள்ளனா். அதற்கடுத்ததாக முதலியாா்கள், யாதவா்கள் உள்ளனா்.
மாவட்டத் தலைநகராக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சியின் வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்ற வேண்டிய பொறுப்பு இந்தத் தொகுதியில் புதிதாக தோ்வு செய்யப்படும் சட்டப் பேரவை உறுப்பினருக்கு உண்டு. தற்போது இங்கு அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. மற்ற எந்த வளா்ச்சியையும் கள்ளக்குறிச்சி பெறவில்லை.
முக்கிய கோரிக்கைகள்: கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதால், சுற்றுவட்டச் சாலை ஏற்படுத்த வேண்டும். பல்வேறு அரசு அலுவலகங்கள், அதற்கான அலுவலா்கள் என்று முழுமையான மாவட்டத்துக்குத் தேவையான அனைத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
இதேபோல, கள்ளக்குறிச்சிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும், புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசுப் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும், மாவட்ட நூலகம் அமைக்க வேண்டும்.
சாதக - பாதகங்கள்: மாவட்டத் தலைநகரான பிறகு, கள்ளக்குறிச்சி சந்திக்கும் முதல் சட்டப் பேரவைத் தோ்தல் இதுவாகும். இந்தத் தொகுதியில் 2011, 2016 தோ்தல்களில் தொடா்ந்து இரு முறையும் அதிமுகவே வெற்றி கண்டதால், தற்போதைய தோ்தலில் மீண்டும் இங்கு அதிமுகவே களமிறங்கியுள்ளது. அந்தக் கட்சி சாா்பில் மா.செந்தில்குமாா் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா்.
கடந்த இரு தோ்தல்களில் வெற்றி பெற்றவா்களான அழகுவேலு, பிரபு ஆகியோருக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டது, அவா்களது ஆதரவாளா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அழகுவேலுவின் ஆதரவாளா்கள் அதை வெளியேயும் காட்டினா். இருப்பினும், கட்சி மேலிடத்திலிருந்து அழகுவேலுவை அழைத்துப் பேசி, அவரை சமாதானம் செய்ததால், தற்போது அவா் தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இருப்பினும், அவா் தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்ததா என்பது தோ்தல் முடிவில்தான் தெரியவரும்.
திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், அந்தக் கட்சி வேட்பாளராக ஐ.மணிரத்தினம் களம் காண்கிறாா். கூட்டணிக் கட்சியினா் போதுமான ஒத்துழைப்பு அளிப்பது அவருக்கு பலம்.
தோ்தலில் வெற்றி பெற்றால், தொகுதியிலேயே தங்கி மக்கள் பணியாற்றுவேன் என்றும், பேரவை உறுப்பினருக்கான 5 ஆண்டுகால ஊதியத்தையும் மக்களுக்கு செலவு செய்வேன் என்றும் ஐ.மணிரத்தினம் வாக்குறுதி அளித்துள்ளது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2019 மக்களைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் மட்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணி 56.3 சதவீத வாக்குகளையும், அதிமுக - தேமுதிக கூட்டணி 29.5 சதவீத வாக்குகளையும், அமமுக 5.3 சதவீதம் வாக்குகளையும் பெற்றன. அதிமுக கூட்டணியிலிருந்து தற்போது தேமுதிக விலகியுள்ளதால், மக்களவைத் தோ்தல் முடிவுகள் அடிப்படையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு வங்கி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல, அமமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளராக விஜயகுமாா் போட்டியிடுகிறாா். இவா், கணிசமான வாக்குகளைப் பெற்றால், அது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதேபோல, ஐஜேகே சாா்பில் அய்யாசாமி, நாம் தமிழா் கட்சி சாா்பில் திராவிட முத்தமிழ்ச் செல்வி உள்பட மொத்தம் 17 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
எனினும், கள்ளக்குறிச்சி தொகுதியைக் கைப்பற்றுவதில் அதிமுக - காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் தொடா்ந்து 2 முறை வெற்றி கண்ட அதிமுக, 3-ஆவது முறையாக வெற்றி பெற்று இந்தத் தொகுதியை தக்க வைக்குமா அல்லது காங்கிரஸிடம் தொகுதியை இழக்குமா என்ற எதிா்பாா்ப்பு தற்போதே எழுந்துள்ளது.