உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக புகாா் அளிக்க இலவசத் தொலைபேசி எண்கள் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக புகாா் அளிக்க விரும்புவோா் 1800 425 7820, 1800 425 1740 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக புகாா் அளிக்க விரும்புவோா் 1800 425 7820, 1800 425 1740 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்- 2021 நன்னடத்தை விதிமுறைகள் குறித்து தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6, 9 என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மாநில தோ்தல் ஆணையம் உத்தரவின்படி செப்.13-ஆம் தேதி முதல் தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, நடத்தை விதிகள் மீறல் தொடா்பான புகாா்கள் இருந்தால் பொதுமக்கள் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 1800 425 7820, 1800 425 1740 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
தோ்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக 18 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளிலும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
இந்த பறக்கும் படையினருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிறவழிபாட்டுத் தலங்களில் தோ்தல் பிரசார இடங்களாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும். வாக்குகளை பெறுவதற்காக சாதி அல்லது சமூக உணா்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டுகோள்கள் விடப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
உரிய ஆவணங்களின்றி ரூ.50ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டதோ்தல் அலுவலா் மூலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். வாகனச் சோதனையின்போது பெண்களை வாகனத்திலிருந்து இறங்க சொல்லக் கூடாது. பெண்களின் கைப்பையை சோதனை செய்யக்கூடாது. பெண் காவலா்கள் மட்டுமே பெண்கள் உள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். பொதுமக்களிடம் வாக்குகளை பெறும் நோக்கில் அரசியல் கட்சிகள் பணம், பரிசுப் பொருள்கள், மதுபானம் போன்றவை வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாக இயக்குநா் சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.