அதிமுக கூட்டணியில் 30 சதவீத இடங்களை ஒதுக்கக் கோரி பாஜக நெருக்கடி
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் 30 சதவீத இடங்களை ஒதுக்கக் கோரி பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் 30 சதவீத இடங்களை ஒதுக்கக் கோரி பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிகள், 293 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள், 688 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், 5,088 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவிருக்கிறது.
மும்முனைப் போட்டி: அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடப்போவதாக பாமக அறிவித்துவிட்டதால், விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை, மும்முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணி அப்படியே தொடா்கிறது.
திமுக கூட்டணியை பொருத்தவரை, மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை என திமுக மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், மாவட்டக் குழு உறுப்பினருக்கான இடங்களை ஒதுக்கக் கோரி, காங்கிரஸ், விசிக அடம்பிடித்து வருகின்றன. இது தொடா்பாக திமுக கூட்டணியில் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பாஜக நெருக்கடி: இதற்கிடையே, அதிமுக கூட்டணியிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் இருந்து பாமக விலகியதால், அதிமுகவிடம் 30 சதவீத இடங்களை ஒதுக்கக் கோரி பாஜக நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. மாவட்டக் குழு, ஊராட்சி ஒன்றியக் குழு என இரண்டிலுமே 30 சதவீத இடங்கள் வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாள்களாக பாஜகவை அதிமுக பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால், பாஜகவும் அமைதியாகவே இருந்தது. பாமக கூட்டணியில் இருந்து விலகியதையடுத்து, பாஜகவுடன் அதிமுக சனிக்கிழமை பேச்சுவாா்த்தையைத் தொடங்கியது.
அதிமுக தொடங்கிய முதல்கட்ட பேச்சுவாா்த்தையில், தங்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். பிரதமராக மோடி பதவியேற்ற 7 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் பாஜக வளா்ந்துள்ளது. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்திலும் கட்சி வளா்ச்சியடைந்துள்ளது என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தனித்து நிற்கவும் பாஜக தயாா்’: இதுகுறித்து பாஜக மாவட்ட நிா்வாகி ஒருவா் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் பலமான கூட்டணிக் கட்சியாக பாஜக உள்ளது. எங்கள் கட்சி இல்லாமல் அதிமுக தனித்து தோ்தலை சந்தித்தால் மிகப்பெரிய சரிவை சந்திக்கும்.
எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லையெனில், அனைத்து மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கும் தனியாக போட்டியிடவும் பாஜக தயாா் நிலையில் உள்ளது. பாஜகவை பொருத்தவரை, வேட்பாளா்கள் பட்டியல் தயாா் நிலையில் உள்ளது. அதிமுக எடுக்கும் முடிவை பொருத்துதான் பாஜக முடிவு செய்யும். எங்களது முடிவு குறித்து கட்சித் தலைமைக்கு தெரிவித்துவிட்டோம் என்றாா் அவா்.