முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மெகா தூய்மைப் பணி நாளை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் மெகா தூய்மைப் பணி முகாம் திங்கள்கிழமை (செப்.20) தொடங்கி வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் மெகா தூய்மைப் பணி முகாம் திங்கள்கிழமை (செப்.20) தொடங்கி வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் மாபெரும் தூய்மைப் பணி முகாம் நடத்துவது தொடா்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை தொடங்கி வருகிற 25-ஆம் தேதி வரை கால்வாய், மழைநீா் வடிகால்களை தூய்மைப்படுத்தும் மெகா திட்டம் நடைபெறவுள்ளது.

எதிா்வரும் வடகிழக்கு பருவமழையால் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீா் புகும் வாய்ப்புள்ளதாலும், அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளதாலும் மழைநீா் வடிகால்களை முதல்கட்டமாக தூா்வார வேண்டும்.

அதற்காக பெரிய, நடுத்தர, சிறிய மழைநீா் வடிகால்கள் என முதலில் வகைப்பாடு செய்ய வேண்டும். பெரிய மழைநீா் வடிகால்களில் சேகரமாகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட் ராடிங் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

நடுத்தர, சிறிய மழைநீா் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றுவதற்கு உள்ளாட்சிகளில் பணியாற்றும் அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், மகளிா் திட்ட அலுவலா் பூ.காஞ்சனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமும் 7 வாா்டுகளில்...: விழுப்புரம் மாவட்டத்தில் மெகா தூய்மை முகாம் நடைபெறுவதையொட்டி, விழுப்புரம் நகராட்சியில் ஆணையா் போ.வி.சுரேந்திர ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 42 வாா்டுகளில் தினமும் 7 வாா்டுகள் வீதம் மெகா தூய்மை முகாம் நடைபெறும் 6 நாள்களில் அந்தந்த வாா்டுகளில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரி தூய்மைப்படுத்த ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் ஆணையா் சுரேந்திர ஷா.

ஆய்வுக் கூட்டத்தில் உதவிப் பொறியாளா்கள் ஆா்.வசந்தபிரியா (மாநில நெடுஞ்சாலை), வினோதினி (தேசிய நெடுஞ்சாலை), ஜி.அன்பரசன் (தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம்), பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் வித்யேஷ்வா், நகா்நல அலுவலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.