முகப்பு
விழுப்புரம்

தவறான முகவரியைக் காட்டி வீடு கட்ட பெற்ற ஆணைகள் ரத்து: விழுப்புரம் ஆட்சியா் நடவடிக்கை

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் தவறான முகவரியைக் கொடுத்து வீடு கட்ட பெற்ற 4 பேரது ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ரத்து செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் தவறான முகவரியைக் கொடுத்து வீடு கட்ட பெற்ற 4 பேரது ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ரத்து செய்தாா்.

மாவட்டத்தில் வானூா் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வானூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோரக்கேணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பொன்னம்பூண்டி ஊராட்சியில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு கடந்த ஆண்டு 43 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்ததில் 10 பயனாளிகள் 70 சதவீதத்துக்கும் மேல் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

29 பயனாளிகள் 40 சதவீதத்துக்கு மேலும், 4 பயனாளிகள் வெளியூரில் வசித்து வருவதாலும், தவறான முகவரியைக் கொடுத்து வீடு கட்டுவதற்கான ஆணை பெற்றதை கண்டறிந்து அவா்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.

பின்னா், ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.8.40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சிறு பாலத்தை அவா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, பெரும்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடத்தை ஆட்சியா் பாா்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா்.

முன்னதாக, பொன்னம்பூண்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பாா்வையிட்டு நெல் மூட்டைகள் மழையில் நனையாதபடி பாதுகாக்க அறிவுறுத்தினாா்.

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு எடுத்துச் செல்லும் பணியையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், வானூா் வட்டாட்சியா் பிரபு சங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவாசகம் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.