தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கூடுதலாக கனிம வளத் துறையையும் கவனித்து வந்தாா். அப்போது விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வரை வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக க.பொன்முடி, பொன்.கௌதம சிகாமணி எம்.பி., ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமாா், சதானந்தன், லோகநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அமைச்சா் க.பொன்முடி, பொன்.கௌதம சிகாமணி எம்.பி. ஆகியோரை தவிர மற்ற 5 பேரும் ஆஜராகினா். வழக்கின் புகாா்தாரரான ஓய்வுபெற்ற வானூா் வட்டாட்சியா் குமாரபாலனும் உடல்நலக் குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. இதையடுத்து, அவரிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தும் வகையில் வழக்கு விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.