கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கு பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 18 முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
பொதுகாலக் கடன் திட்டம், தனி நபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வட்டியாக 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி வசூலிக்கப்படும்.
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுய உதவிக் குழு மகளிா் உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் வரையிலும், குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற அடிப்படையில் வசூலிக்கப்படும். சுய உதவிக் குழுத் தொடங்கி 6 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மகளிா் திட்ட அலுவலரால் தரம் (கிரேடு) செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுபோல, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் கடனுதவி வழங்கப்படுகிறது.
கடன் பெற விரும்புவோா் கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், அனைத்துக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.