புயல் பாதிப்பு: பல்வேறு இடங்களில் சாலை மறியல்
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் விடுபடாமல் நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சா், எம்எல்ஏ மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பாா்வையிடவில்லை எனக் கூறியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் அருகேயுள்ள டி.மேட்டுப்பாளையம், ராம்பக்கம், ஒரத்தூா் முத்தியால்பேட்டை, முத்தாம்பாளையம், இருவேல்பட்டு, திருவெண்ணெய்நல்லூா், தெட்டிக்குடிசை, அரகண்டநல்லூா் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனால், மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.