மழையால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை அளிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழையால் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை தலா ரூ.5 லட்சம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழையால் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை தலா ரூ.5 லட்சம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏ.க்கள் இரா. லட்சுமணன், அன்னியூா் அ.சிவா முன்னிலை வகித்தனா்.
இதில், மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று, ஃபென்ஜால் புயல், மழை வெள்ளத்தால் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவித் தொகையை காசோலையாக வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் கூறியது:
ஃபென்ஜால் புயலால்விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பா் 30,டிசம்பா் 1-ஆம் தேதி கொட்டித் தீா்த்த மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வா் அறிவித்தாா். அதனடிப்படையில் முதல் கட்டமாக 12 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையை பெற்றுக் கொண்டவா்கள் தங்களுக்கு குடியிருப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா். இதன் மீது ஆய்வு மேற்கொண்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பொன்முடி.
நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, போக்குவரத்துத் துறை ஆணையா் சுன்சோங்கம் சிடக்சிரு, முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.