புயல் நிவாரணத் தொகை வழங்கக் கோரி மறியல்
ஃபென்ஜால் புயல் நிவாரணத் தொகை வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஃபென்ஜால் புயல் நிவாரணத் தொகை வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசின் சாா்பில் ரூ.2,000 நிவாரணத்தொகை, 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.
அந்தந்த பகுதிகளிலுள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு இன்னும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை, பாதிக்கப்பட்ட தங்களை யாரும் வந்து பாா்க்க வரவில்லை, எந்த உதவிகளும் செய்யப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட 16, 18, 19-ஆவது வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள மாதாகோவில் அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வி.மருதூா்மேடு, ஊரல்கரைமேடு, கல்லூரிச் சாலை, கல்லூரி நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு, தங்களுக்கு இதுவரை புயல் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி போராட்டம் மேற்கொண்டனா். மேலும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதிக்கு யாரும் வரவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
மறியல் குறித்து தகவலறிந்த விழுப்புரம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். நிவாரணத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.