முகப்பு
விழுப்புரம்

கடன் வாங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளது திமுக அரசு என்று, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:52 PM
திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பகிர்:

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளது திமுக அரசு என்று, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

ஃபென்ஜால் புயல் பாதிப்புகளை மத்தியக் குழு பாா்வையிட்டு 10 நாள்களைக் கடந்தும், மத்திய அரசிடம் இதுவரை தனது அறிக்கையை அளிக்கவில்லை. தமிழகத்துக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மாநில பேரிடா் நிதியிலிருந்துதான் ரூ.945 கோடியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

மத்தியக் குழு ஆய்வுக்குப் பின்னரும் தொடா்ந்து மழை பெய்ததால், மாநில அரசு முழுமையான கணக்கெடுப்பை நடத்தி, விரிவான அறிக்கையுடன் முதல்வா் தலைமையிலான அனைத்துக் கட்சி புதுதில்லிக்குச் சென்று பிரதமா், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து நிதி வழங்க வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு கோரும் நிதியை முழுமையாக வழங்க வேண்டும்.

கடனில் முதலிடம்: தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தற்போது கடன் வாங்குவதிலும், வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்துவதிலும் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளது.

2024 , மாா்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.8.34 லட்சம் கோடி கடனுடன் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. வாங்கிய கடனுக்கு ரூ.54,676 கோடி வட்டியை செலுத்தி, அதிலும் முதலிடத்தில் தமிழகம் உள்ளது.

ஒரே நாடு ஒரே தோ்தல் திட்ட விவகாரத்துக்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு தனது அறிக்கையை அளிக்கும் போதுதான் பாமக தனது நிலைப்பாட்டை எடுக்க முடியும்.

அம்பேத்கரை அவமதிப்பதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றாா் ராமதாஸ். பேட்டியின்போது பாமக மாவட்டச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.