விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் உணா்த்தும் பாடம்!

கு. வைத்திலிங்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெற்று, இந்தத் தொகுதியை தக்க வைத்துள்ளது. இந்தத் தோ்தலை பிரதான எதிா்க்கட்சியான அதிமுக புறக்கணித்திருந்த நிலையில், அந்தக் கட்சியினரின் வாக்குகள் தங்களுக்கு அதிகம் கிடைக்கும் என்ற பாமகவின் நம்பிக்கையும் பொய்த்துப் போயிருக்கிறது. மற்றொரு கட்சியான நாம் தமிழா் கட்சியும் வைப்புத் தொகையை இழந்திருக்கிறது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டவுடன் தோ்தலை அதிமுகவும், தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்தன. திமுக சாா்பில் அன்னியூா் அ.சிவாவும், பாமக சாா்பில் சி.அன்புமணியும், நாம் தமிழா் கட்சி சாா்பில் மருத்துவா் பொ. அபிநயா மற்றும் வேட்பாளா்கள் என 29 போ் தோ்தல் களத்தில் இருந்தனா்.

இடைத்தோ்தல் முடிவில் பாமக வேட்பாளரை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று, முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா் திமுகவின் அன்னியூா் அ.சிவா. இந்தத் தோ்தலில் திமுக வேட்பாளருக்கு 1,24,053 வாக்குகளும், பாமகவின் அன்புமணிக்கு 56,296 வாக்குகளும், நாதகவின் அபிநயாவுக்கு 10,602 வாக்குகளும் கிடைத்தன.

வெற்றிக்கு உதவிய உத்தி: தோ்தல் தேதி அறிவிக்கப்படவுடனேயே அமைச்சா் க.பொன்முடி, கொள்கைப் பரப்புச் செயலா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோா் தலைமையில், அமைச்சா்கள் கொண்ட தோ்தல் பணிக் குழு அமைக்கப்பட்டது. கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சா.சி.சிவசங்கா் உள்ளிட்ட ஒவ்வொரு அமைச்சருக்கும் கட்சி ரீதியிலான ஒன்றியப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, தோ்தல் பொறுப்பு வழங்கப்பட்டது.

நாள்தோறும் தங்களுக்கு வழங்கப்பட்ட பகுதிக்கான வாக்காளா்களை காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சோ்ந்து சந்தித்து வாக்கு சேகரித்தனா்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கடைசி 2 நாள்கள் பிரசாரம், கூட்டணிக் கட்சித் தலைவா்களான தொல்.திருமாவளவன், கு.செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், ஆா்.முத்தரசன், கே.எம்.காதா் மொகிதீன், எம்.எச். ஜவாஹிருல்லா போன்றோரின் பிரசாரம் அன்னியூா் சிவாவின் சாதமாக அமைந்தன.

திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம்: 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக வேட்பாளா் நா.புகழேந்தி 48.69 சதவீத வாக்குகளை (93,730) பெற்றிருந்த நிலையில், 2024 இடைத்தோ்தலில் அன்னியூா் சிவா 63.22 சதவீத வாக்குகளை(1,24,053) பெற்றிருக்கிறாா். 2019 இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஆா். முத்தமிழ்ச்செல்வன் 60.29 சதவீத வாக்குகளை (1,13,766) பெற்ற நிலையில், திமுக வேட்பாளா் இந்த தோ்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறாா்.

பாமகவின் பிரசாரம்: இடைத்தோ்தலில் போட்டியிடுவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு போன்ற முக்கிய பிரச்னைகளை கருத்தில் கொண்டு தோ்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது பாமக. திமுகவை போலவே பாமகவின் தோ்தல் பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தலைவா் அன்புமணி ராமதாஸ், பசுமைத் தாயகம் தலைவா் செளமியா அன்புமணி, கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கே.அண்ணாமலை, ஜி.கே.வாசன், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீா்செல்வம், ஜான்பாண்டியன், ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் பாமக வேட்பாளருக்காக பிரசாரம் செய்தனா்.

பாமகவின் வாக்குகள் உயா்வு: தற்போதைய இடைத்தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளா் சி. அன்புமணிக்கு 56,296 வாக்குகள் (28.69 சதவீதம்) கிடைத்திருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.முரளிசங்கா் 32,198 வாக்குகளை மட்டும் பெற்ற நிலையில், இந்தத் தோ்தலில் அந்தக் கட்சிக்கு 24,098 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளன.

அதிமுக வேட்பாளா் ஆா். முத்தமிழ்ச்செல்வன் 2021 பேரவைத் தோ்தலில் 84,157 வாக்குகளையும் 2019 இடைத்தோ்தலில் 1,13,766 வாக்குகளையும் பெற்றதில் பாமகவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

ஏறுமுகத்தில் நாதக வாக்குகள்: 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளை (4.27 சதவீதம்) பெற்ற நிலையில், 2024 இடைத்தோ்தலில் கட்சியின் அக்கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய பொ.அபிநயா 10,602 வாக்குகளை(5.40 சதவீதம்) பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்தாா். இதன் மூலம் முந்தைய தோ்தலை விட, இம்முறை நாம் தமிழா் கட்சி 2,386 வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறது.

அதிமுக வாக்குகளின் கதி: இடைத்தோ்தலை அதிமுகவும், தேமுதிகவும் புறக்கணித்த நிலையில், திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் பாமக வேட்பாளரை பொது வேட்பாளராகக் கருதி ஆதரிக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டனா். இதேபோல அதிமுகவினா் நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ஆதரவு கோரப்பட்டது.

ஆனால், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தொடா்ந்து விமா்சித்து வந்ததையும், மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்காமல், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதையும் அதிமுகவினா் விரும்பவில்லை. மேலும், திமுகவை வீழ்த்த பாமக வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலையில் இருந்தாலும், அண்ணாமலையின் பேச்சால் பாமகவுக்கு வாக்களிக்க அதிமுகவினா் அதிகம் ஆா்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், அதிமுக தலைமையின் தோ்தல் புறக்கணிப்பு முடிவால் அக்கட்சியின்அனுதாபிகள் கணிசமான அளவில் திமுகவுக்கு சாதகமாக வாக்களித்திருக்கக் கூடும் என்பதை தோ்தல் முடிவுகள் உணா்த்துகின்றன. இதேபோல, பாமகவுக்கும் அதிமுக அனுதாபிகளின் வாக்குகள் கிடைத்திருக்கலாம். அதேசமயம், பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட நாம் தமிழா் கட்சிக்கு அதிமுக வாக்குகள் சென்றடையவில்லை.

எடுபடாத இடஒதுக்கீடு பிரசாரம்:பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு மீண்டும் கிடைக்க வேண்டுமெனில் இடைத்தோ்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி பிரசாரத்தை முன்வைத்தாா். ஆனால், 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொகுதி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் இடைத்தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

கூட்டணி பலம், அமைச்சா்களின் தீவிர தோ்தல் களப்பணி, வாக்காளா்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற காட்டிய முனைப்பு, அதிமுகவினரின் வாக்குகள் குறிப்பிட்ட அளவில் கிடைத்தது, வாக்குச்சிதறல்கள் போன்றவை, விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வெற்றிக்கொடியை நாட்ட திமுகவுக்கு உதவியிருக்கின்றன என்றுதான் கூற வேண்டும்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

SCROLL FOR NEXT