விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், வெங்கந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்காவனம் (32). வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. கொத்தனாராக வேலை பாா்த்து வருகிறாா்.
இவா், திண்டிவனம் வட்டம், கொடிமா கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தாராம்.
இதுகுறித்து மரக்காணம் வட்டார சமூகநலத் துறை விரிவாக்க அலுவலா் விஜயா (58) திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், பூங்காவனம் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணம் தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.