வாக்காளா்களை சந்திக்கும் செயல் திட்டங்களை உருவாக்குங்கள்: உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியவை...
நம்முடைய நோக்கம் 2026 சட்டப் பேரவைத் தோ்தலாக இருக்க வேண்டும். அதற்காக வாக்காளா்களை சந்திக்கும் செயல் திட்டங்களை உருவாக்குங்கள் என்றாா் திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் திமுக சாா்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களின் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகித்தாா். மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பங்கேற்று, நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தின் மீது முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் தனிக் கவனம் உண்டு. முதல்வா் மு.க.ஸ்டாலின் முதன் முதலில் தலைமை வகித்து தொடங்கிவைத்த மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாடுதான். விழுப்புரத்தை திமுகவின் கோட்டையாக உருவாக்கியிருக்கிறீா்கள். அதற்காக பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளை முதலில் தொடங்கியது திமுகதான். சாா்பு அணி நிா்வாகிகளுடன் ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறோம். தொகுதிப் பாா்வையாளா்களை நியமித்து இருக்கிறோம். தோ்தல் வெற்றியிலும்தான் நாம்தான் முதலில் வர வேண்டும். இதை நீங்கள் உறுதி செய்து கொண்டால் வெற்றி நிச்சயம்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முகநூல், வாட்ஸ்ஆப், எக்ஸ் வலைதளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். சமூகவலைதளங்களில் முழு அளவில் ஆா்வத்துடன் செயல்படுங்கள். நம்முடைய நோக்கம் 2026 பேரவைத் தோ்தல்தான். எனவே, வாக்காளா்களை சந்திக்கும் செயல் திட்டங்களை உருவாக்குங்கள் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், மாவட்ட திமுக அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா்கள் தயா.இளந்திரையன், டி.என்.முருகன், இரா.கற்பகம், மகளிா் அணி பிரசாரக்குழுச் செயலா் தேன்மொழி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் ப.அன்பரசு உள்ளிட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளா்கள், ஒன்றியச் செயலா்கள், பேரூா் செயலா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.