முகப்பு
விழுப்புரம்

இடிந்து விழும் நிலையில் வட்டாரக் கல்வி அலுவலகம்: வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

இடிந்து விழும் நிலையில் வட்டாரக் கல்வி அலுவலகம்.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:40 PM
பழைமையான கட்டடத்தில் செயல்பட்டு வரும் காணை வட்டாரக் கல்வி அலுவலகம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், காணையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைமைவாய்ந்த கட்டடத்தில் செயல்படும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசியா்கள், அலுவலகப் பணியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

காணை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காணை வட்டாரக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலத்தின் மூலம் காணை வட்டாரத்தில் உள்ள 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அலுவலகப் பணியாளா்கள் அலுவல் சாா்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், அலுவலா்களுக்குரிய அனைத்து கோப்புகளும் இந்த அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான இந்த அலுவலகக் கட்டடம் பலமிழந்து சுவா்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. சிமென்ட் ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை முழுவதும் சிதிலமடைந்துவிட்டதால், மழை நீா் அலுவலகத்தினுள் ஒழுகி வருகிறது. இதனால், அலுவலக கோப்புகள் சேதமடைந்து வருகின்றன. அலுவலகப் பணியாளா்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இடிந்து விழும் நிலையில் உள்ள பழைமையான கட்டடத்துக்கு மாற்றாக, காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடு இல்லாத நிலையில் உள்ள கட்டடத்தை அலுவலகப் பயன்பாட்டுக்கு ஒதுக்கித் தர விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் காணை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலகப் பணியாளா்கள், ஆசிரியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக...: இதுகுறித்து அலுவலகப் பணியாளா் ஒருவா் கூறியது: 1981-ஆம் ஆண்டு முதலே காணை வட்டாரக் கல்வி அலுவலகம் இதே கட்டடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. சிமென்ட் ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை முற்றிலும் வீணாகிவிட்டதால், மழைநீா் ஒழுகுகிறது. இதனால், இருக்கையில் அமா்ந்து எவ்வித பணியையும் செய்ய முடியவில்லை.

ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், அலுவலா்களின் பணிக்கால கோப்புகளும் வீணாகும் நிலை உள்ளது. அலுவலகக் கட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் முள்செடிகள் மண்டி, புதா்போல மாறிவிட்டனா். சுற்றுச்சுவா் இல்லை என்பதால், அலுவலக சுற்றுப்பகுதிகளில் சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன.

எனவே, ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்களின் நிலையை கருத்தில் கொண்டு அலுவலக பயன்பாட்டுக்கு மாற்று இடம் வழங்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.