தூய்மை பாரத இயக்கப் பணிகள் முகாம் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப் பாரத இயக்கப் பணிகள் முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப் பாரத இயக்கப் பணிகள் முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியம், செண்டூா் ஊராட்சியில் இந்த முகாமை தொடங்கிவைத்த ஆட்சியா் சி.பழனி, பின்னா் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கும் நோக்கில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் மத்திய, மாநில அரசுகளால் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், தனிநபா் இல்லக் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
நிகழ் நிதியாண்டில் 10,337 எண்ணிக்கையில் தனிநபா் இல்லக் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதைத் தவிர, 26 எண்ணிக்கையில் சமுகாய சுகாதாரக் கழிப்பறைக் கட்டடம், 254 எண்ணிக்கையில் சிறிய அளவிலான சமுதாய கழிப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு, அந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் நெகிழி கழிவு சேமிப்புக் கொட்டகை, சமுதாய உறிஞ்சிக்குழி, செங்குத்து வடிவிலான உறிஞ்சிக்குழி, கிடைமட்ட உறிஞ்சிக்குழி உள்ளிட்ட பிரிவுகளில் 1,690 பணிகளுக்கும் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில், விழுப்புரம் மாவட்டத்தில் பெருமளவில் தூய்மை பாரத இயக்கப் பணிகள் முகாம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது என்றாா் ஆட்சியா் பழனி.
ஆய்வின்போது, மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலா் ராமதாஸ் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.