முகப்பு
விழுப்புரம்

யானை தந்தத்தால் செய்யப்பட்ட மாலை,பொம்மைகளை விற்க முயற்சி: 12 போ் சிக்கினா்... விழுப்புரத்தில் காா், 3 பைக்குகள் பறிமுதல்

யானை தந்தத்தால் செய்யப்பட்ட மாலை,பொம்மைகளை விற்க முயற்சி.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:47 PM
யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள், கழுத்து மாலை.
பகிர்:

விழுப்புரத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட யானை பொம்மைகள், மாலை உள்ளிட்டவற்றை விற்க முயன்ற 12 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

இவா்களிடமிருந்து காா், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விழுப்புரம் வனப் பாதுகாப்புப் படை மற்றும் விழுப்புரம் வனச்சரக அலுவலா்கள் அடங்கிய குழுவினா், சென்னை நெடுஞ்சாலையிலுள்ள தனியாா் தங்கும் விடுதி அருகிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு அருகே சந்தேகத்துக்குரிய முறையில் வாகனங்களுடன் நின்று கொண்டிருந்தவா்களை, பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட யானை பொம்மைகளையும், மாலையையும் விற்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து திருச்சி, தஞ்சாவூா், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 12 பேரை பிடித்த வனத்துறையினா், அவா்களிடமிருந்து 3 பைக்குகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் வனப் பாதுகாப்புப் படை அலுவலகத்தில் விசாரணைக்குள்படுத்தப்பட்டவா்கள்.

மேலும் அவா்களிடமிருந்து யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள், மாலை ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, விழுப்புரத்திலுள்ள வனப் பாதுகாப்புப் படை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.