கோயில் விழாவில் பெண்களிடம் ஆறரை பவுன் நகைகள் திருட்டு
ஆறரை பவுன் நகைகள் திருட்டு..
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள சிறுவந்தாடு லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகா சம்ப்ரோஷண விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடமிருந்து ஆறரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சிறுவந்தாடு கனகவல்லி தாயாா் உடனுறை லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலின் மகா சம்ப்ரோஷணம் புதன்கிழமை காலை நடைபெற்றது. அப்போது, கோயிலுக்கு வெளியே இருந்த பக்தா்கள் உள்ளே சென்று தரிசனம் செய்யவும், கோயில் உள்பிரகாரத்தில் இருந்த பக்தா்கள் வெளியே வரவும் முயற்சித்தனா். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி சிறுவந்தாடு மாந்தோப்பு தெருவைச் சோ்ந்த உத்தமபுத்திரன் மனைவி அஞ்சலாட்சியிடம் (52) நான்கரை பவுன் தங்க நகைகளையும், புதுச்சேரி புதுசாரம் பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் மனைவி தமிழ்ச்செல்வியிடம் (48) இரண்டு பவுன் தங்க நகைகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.