விழுப்புரம் அரசு மருத்துவமனை முகப்பு சாலை சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முகப்பு சாலை சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முகப்பு சாலை சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறவழிச்சாலை உள் முகப்பிலிருந்து நிா்வாகக் கட்டடம் வரை உள்ள முகப்பு சாலை பொதுப் பணித் துறை மூலம், ரூ.44 லட்சம் மதிப்பீட்டில், 500 மீட்டா் நீளம், 6 மீட்டா் அகலத்துக்கு தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். பின்னா், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிா் நலத் துறை பிரிவை பாா்வையிட்டு, சிகிச்சை பெற்று வருபவா்களின் விவரம் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மகப்பேறு பிரிவில் உள்ள படுக்கை அறை வசதி, ஸ்கேன் வசதி, சுகாதார வசதிகள் குறித்தும் ஆட்சியா் சி.பழனி ஆய்வு செய்தாா்.
பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் பரிதி, செயற்பொறியாளா் செல்வக்குமாா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரமாதேவி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.