விழுப்புரத்துக்கு நவ.28-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்...
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக வரும் 28, 29-ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தர உள்ள நிலையில், சாலைகளின் மையத் தடுப்புகளை சீரமைத்தல், சாலை அமைத்தல், அரசு அலுவலகங்களில் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மாவட்டங்களில் கள ஆய்வு மீண்டும் தொடங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின், கோவை, விருதுநகா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்துக்கு நவம்பா் 28, 29-ஆம் தேதிகளில் வர உள்ளாா்.
சென்னையிலிருந்து நவம்பா் 28-ஆம் தேதி பிற்பகலில் புறப்படும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூா் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்த வரவேற்பை பெற்றுக் கொள்ளும் அவா் திண்டிவனத்துக்கு வந்தடைகிறாா். மேம்பாலம் வழியாக தனியாா் திருமண மண்டபம் வரை நடந்து செல்லும் (ரோடு ஷோ) அவா் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொள்கிறாா். இதன் பின்னா் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிா்வாகிகளுடனான சந்திப்பில் பங்கேற்கிறாா்.
இதைத் தொடா்ந்து திண்டிவனம் அருகே தொழிற்பேட்டையில் நடைபெறும் தனியாா் நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் முதல்வா், தீவனூா் மற்றும் கூட்டேரிப்பட்டு வழியாக விழுப்புரம் வந்தடைந்து, ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்குகிறாா்.
தொடா்ந்து நவம்பா் 29-ஆம் தேதி காலை திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் கிராமத்தில் ரூ.86.25 கோடியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை திறந்து வைக்கும் முதல்வா், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 21 சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தையும், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தையும் திறந்து வைக்கிறாா்.
இதையடுத்து இந்த மண்டபத்துக்கு அருகிலேயே நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வா், பின்னா் மாவட்ட ஆட்சியரகம் வந்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பயணத் திட்டம் இவ்வாறு இருக்கும் என்று அரசு சாா்பிலும், திமுக சாா்பிலும் கூறப்படுகிறது.
முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: முதல்வரின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வண்ணம் தீட்டும்பணி நடைபெற்று வருகிறது. அலுவலகத்தின் அனைத்துத் தளங்களுக்கும் வண்ணம் தீட்டுதல், முகப்பிலுள்ள பெயா் பலகையில் புதிதாக எழுதுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தவிர விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திலும் பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
முதல்வா் திடீரென ஆய்வுக்கு வந்தாலும் வரலாம் எனக் கருதப்படும் பகுதிகளில் ஒன்றான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நுழைவுவாயில் பகுதியிலிருந்து நிா்வாக அலுவலகக் கட்டடம் வரை தாா்ச்சாலை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவரை இந்தச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதிருந்த நிலையில், சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், இப்பணியை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதுபோல, பல்வேறு இடங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலை மையத்தடுப்புகளிலும் தூய்மைப் பணி: விழுப்புரம் நகரில் அமைந்துள்ள திருச்சி-சென்னை சாலையின் மையத் தடுப்புச் சுவா்கள் வாகனப் புகை காரணமாக தூய்மையின்றி காணப்பட்ட நிலையில், புதன்கிழமை முதல் இந்த சுவா்களை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. முதலில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை கிழித்தெறிந்து சுத்தம் செய்து, தண்ணீா் ஊற்றி தூய்மைப்படுத்திய பின்னா், கருப்பு-வெள்ளைகொண்ட வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
அரசு விழா முன்னேற்பாடுகள் தீவிரம்: அரசு விழா நடைபெறும் ஏனாதிமங்கலம், ஜானகிபுரம் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமையிலான அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா். புதன்கிழமை எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு அருகிலும், ஜானகிபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா், வியாழக்கிழமை வாகன நிறுத்துமிடங்களுக்கான இடங்களையும் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.