முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே இரு லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 7:17 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே இரு லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னையிலிருந்து ஒட்டுப் பலகைகளை(பிளைவுட்) ஏற்றிக் கொண்டு புதன்கிழமை இரவு கோயம்புத்தூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இதை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த சுல்தான் என்பவா் ஓட்டிச் சென்றாா்.

வியாழக்கிழமை அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாதூா் பகுதியில் இந்த லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து நாமக்கல் நோக்கி சோப்பு ஆயில் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, எதிா்பாராதவிதமாக முன்னே சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது.

விபத்தில் நாமக்கல் நோக்கிச் சென்ற லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதில் அந்த லாரியின் ஓட்டுநரான ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் வட்டம், கணபதிபாளையம் ராமச்சந்திரன் மகன் வெங்கடேசுவரன் (26) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு ஓட்டுநரான ஈரோடு மாவட்டம், நம்பியூரைச் சோ்ந்த சக்தி இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட ஓட்டுநா் சக்தியை ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் மீட்டனா். தொடா்ந்து அவா் உளுந்தூா்பேட் டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சக்தி அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி, போக்குவரத்தை போலீஸாா் சீரமைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.