முகப்பு
விழுப்புரம்

உதவித்தொகை பெற அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள், தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:10 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள், தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழறிஞா்கள் மறைவுக்குப் பின்னா், அவா்களின் மரபுரிமையருக்கு, அவா் வாழ்நாள் முழுவதும் ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 1,334 அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் பயனடைந்துள்ளனா்.

அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தமிழறிஞா்களிடமிருந்து 2024-25 ஆம் நிதியாண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மகளிா் உரிமைத்தொகை, சமூகநலப் பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழக அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பிப்பவா்களுக்கு 2024, ஜனவரி 1-ஆம் தேதி 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

மேலும், தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்றிதழ் இரண்டு தமிழறிஞா்களிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், மரபுரிமையா் (கணவா்/மனைவி) இருப்பின் அவரது ஆதாா் அட்டை நகல் இணைக்க வேண்டும்.

உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுலவகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளத்தில் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.