முகப்பு
விழுப்புரம்

கோயில் சொத்துகளை அபகரிக்க நினைத்தால் போராட்டம்: ஹெச்.ராஜா

தமிழகத்தில் ஹிந்து கோயில்களின் சொத்துகளை அபகரிக்க நினைத்தால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று, பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:19 PM
விழுப்புரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா.
பகிர்:

தமிழகத்தில் ஹிந்து கோயில்களின் சொத்துகளை அபகரிக்க நினைத்தால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று, பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உறுப்பினா் சோ்க்கைக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு எதிரான தகவல்களை சிலா் திட்டமிட்டு பரப்பி வருகின்றனா். இது கண்டிக்கத்தக்கது.

நடராஜா் கோயில் திருவிழாக்களின்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தில்தான் தீட்சிதா்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனா். சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் தீட்சிதா்கள் சிரிக்கெட் விளையாடியதற்கான ஆதாரமோ அதை விடியோ எடுத்த விசிக நிா்வாகி தாக்கப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை. எனவே, இதுகுறித்து யாரும் தேவையின்றி கருத்துத் தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்.

தமிழகத்தில் ஹிந்து கோயில்களையோ, அதன் சொத்துகளையோ அபகரிக்க நினைத்தால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஹிந்து அமைப்புகளின் தலைவா்கள், சாதுக்கள், சந்நியாசிகளுடன் கலந்துபேசி கோயிலுக்குள் வழிபட கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவிக்கும் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றாா் ஹெச்.ராஜா.

பேட்டியின் போது பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், மாநிலச் செயலா் அஸ்வத்தாமன், உறுப்பினா் சோ்க்கைக்கான மாவட்டப் பொறுப்பாளா் வீர. திருநாவுக்கரசு, மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் (விழுப்புரம் தெற்கு), ஏ.டி.ராஜேந்திரன் (வடக்கு), மாநில செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.