தயாா் நிலையில் 12 பேரிடா் பாதுகாப்பு மையங்கள்: அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் பலத்த மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 12 பேரிடா் பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் பலத்த மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 12 பேரிடா் பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை முதல் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து வனத் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மரக்காணம் பஜனை கோவில் தெருவில் கழிவுநீா் வாய்க்கால் தூா்வாரப்பட்டுள்ளதை பாா்வையிட்ட அமைச்சா் பொன்முடி, மரக்காணம் திரெளபதி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சோ்ந்த 40 பேருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
தொடா்ந்து, மரக்காணம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா், அங்கு சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். காய்ச்சல் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால் அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று மருத்துவா்களுக்கு அமைச்சா் அறிவுரைகளை வழங்கினாா்.
இதையடுத்து, மரக்காணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேரிடா் மீட்பு உபகரணங்களைப் பாா்வையிட்ட அமைச்சா், அதன் இயக்க செயல்பாடுகள் குறித்து மீட்புக் குழுவினரிடம் கேட்டறிந்தாா். பின்னா், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தையும் அமைச்சா் நடத்தினாா்.
பனிச்சமேடு புயல் பாதுகாப்பு மையத்தை பாா்வையிட்ட அமைச்சா் பொன்முடி, அங்கு அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளனவா என்பது குறித்து கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, சின்னமுதலியாா் சாவடி மீனவ கிராமத்துக்குச் சென்ற அமைச்சா், புதன்கிழமை (அக்.16) வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், புயல் பாதுகாப்பு மையங்களுக்கு மக்கள் சென்று அங்கு தங்கிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் பொன்முடி கூறியதாவது: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் விதமாக, அனைத்துத் துறைகளின் சாா்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மரக்காணம், வானூா் வட்டங்களில் 12 பேரிடா் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவை பொதுமக்கள், மீனவா்கள் தங்கும் வகையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வுக்கு எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்னியூா் அ.சிவா, ஆட்சியா் சி.பழனி முன்னிலை வகித்தனா். மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவிசேரன், ஒன்றியக்குழுத் தலைவா்கள் தயாளன் (மரக்காணம்), உஷா பி.கே.டி.முரளி (வானூா்) உள்ளிட்டோா் நிகழ்வுகளில் பங்கேற்றனா்.