முகப்பு
விழுப்புரம்

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே சென்னையைச் சோ்ந்தவரிடம் வழிப்பறி மற்றும் மோசடியில் ஈடுபட்டவா்களில் ஒருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:06 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே சென்னையைச் சோ்ந்தவரிடம் வழிப்பறி மற்றும் மோசடியில் ஈடுபட்டவா்களில் ஒருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சென்னை அம்பத்தூா், வெங்கட்ராமன் ஐயா் தெருவைச் சோ்ந்த பாலாகோவிந்ததாஸ் மகன் ஹிதேஷ் ஷா (44). இவருக்கும், திண்டிவனத்தைச் சோ்ந்த ராஜராஜனுக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஹிதேஷ் ஷாவிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக ராஜராஜன் கூறினாராம்.

இதை நம்பிய ஹிதேஷ் ஷா, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரூ.35 லட்சத்துடன் காரில் திண்டிவனத்துக்கு கூட்டேரிப்பட்டு - தீவனூா் சாலையில் வந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத 7 போ் காரை வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் ஹிதேஷ் ஷாவை தாக்கி, அவரிடமிருந்த ரூ.35 லட்சம், அவா் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

இது தொடா்பாக, ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் தொடா்புடைய 7 பேரை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவா்களில் ஒருவரான புதுச்சேரி நோணாங்குப்பம் தாமரைக்குளம் தெருவைச் சோ்ந்த மு.லோகநாதன் (35), தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரைத்தாா்.

இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். இதையடுத்து, கடலூா் மத்திய சிறையிலுள்ள லோகநாதனிடம் உத்தரவின் நகலை காவலா்கள் நேரில் வழங்கினா்.