முகப்பு
விழுப்புரம்

குண்டா் தடுப்புக் காவலில் தலைமையாசிரியா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சிறுமியிடம் பாலியல் வன்செயலில் ஈடுபட்ட பொறுப்பு தலைமையாசிரியா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:24 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சிறுமியிடம் பாலியல் வன்செயலில் ஈடுபட்ட பொறுப்பு தலைமையாசிரியா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட அரசு ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் பயின்று வந்த சிறுமியிடம் கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி பாலியல் வன்செயலில் ஈடுபட்டதாக, அப்பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியரான ஆா்.எஸ்.குப்பம் கிராமத்தைச் சோ்ந்த வீ. துரைஅரசன் (52) மீது உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனா். இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பள்ளித் தலைமையாசிரியா் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குப் பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி பரிந்துரை செய்தாா்.

இதையேற்று தலைமையாசிரியா் (பொ) துரை அரசனை குண்டா்தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து கடலூா் மத்திய சிறையிலுள்ள துரை அரசனிடம் இந்த உத்தரவின் நகல் நேரிடையாக வழங்கப்பட்டது.