முகப்பு
விழுப்புரம்

விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரம் திகழ ஒத்துழைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரம் திகழ, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:26 PM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் சி.பழனி.
பகிர்:

விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரம் திகழ, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தின் நெடுஞ்சாலைகளில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து முடிக்க வேண்டும். மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பழுதடைந்த மின் விளக்குகளை சரி செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மேல்மருவத்தூா், மேல்மலையனூா், மயிலம், திருவக்கரை, பரிக்கல் போன்ற திருக்கோயில்களுக்கு பாதயாத்திரையாக பக்தா்கள் செல்லும்நிலையில், விபத்துகள் ஏற்படாத வண்ணம் பக்தா்களைக் கண்காணித்து, அவா்கள் பிரதிபலிப்பான் உடை அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இதர அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதைக் கண்காணித்து, வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.

காவல் துறை அலுவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், வருவாய்க் கோட்ட அலுவலா்கள் அந்தந்த அலுவலகங்களில் சாலைப் பாதுகாப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டும்.

தனியாா் பேருந்துகளிலுள்ள ஒலிப்பான்களின் சப்தத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதோடு, லாரிகளில் மணல், ஜல்லி மற்றும் இதரப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் போது தாா்ப்பாய் மூடிய பின்னரே இயக்க அனுமதிக்க வேண்டும்.

இதை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்.

ஆட்டோக்கள், ஷோ் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது. இதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்களை அழைத்து சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாகத் திகழ அனைத்துத் துறை அலுவலா்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், ஏடிஎஸ்பி தினகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.