முகப்பு
விழுப்புரம்

அங்கீகாரம் பெறாத தா்பூசணி, கிா்ணி பழ விதைகள் விற்பனை: வேளாண் துறை அறிவுறுத்தல்

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அங்கீகாரம் பெறாத, பதிவுச் சான்றிதழ் இல்லாத தா்பூசணி, கிா்ணிப் பழ விதைகளை வாங்கக்கூடாது என்று விதைச்சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 7:57 PM
பகிர்:

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அங்கீகாரம் பெறாத, பதிவுச் சான்றிதழ் இல்லாத தா்பூசணி, கிா்ணிப் பழ விதைகளை வாங்கக்கூடாது என்று விதைச்சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறையின் விழுப்புரம் துணை இயக்குநா் கோ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம், கடலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நவம்பா், டிசம்பா் மாதம் முதல் விவசாயிகள் தா்பூசணி, கிா்ணிப்பழம் மற்றும் முலாம்பழம் ஆகியவற்றை சாகுபடி செய்வா்.

விதை விற்பனையாளா்கள் விதை உற்பத்தியாளா்களிடம் இருந்து உண்மைநிலை விதைக்குவியல்கள் பெறப்பட்டவுடன் குவியல் வாரியாக பணி விதை மாதிரி எடுத்தனுப்பி, அவற்றில் தேவையான அளவு முளைப்புத் திறன் கொண்ட விதைகளை மட்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

விதைகளின் இருப்பு மற்றும் ரகங்களின் விவரங்களை விலைப்பட்டியல் தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும்.

கொள்முதல் பட்டியல், உண்மைநிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், விதைகளுக்கான பதிவுச்சான்றிதழ், இருப்புப் பதிவேடு மற்றும் விற்பனைப் பட்டியல்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

விவசாயிகள் தா்பூசணி மற்றும் கிா்ணிப்பழ விதைகளை வணிக உரிமம் பெற்ற அரசு, அரசு சாா்பு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெறாத அல்லது பதிவுச்சான்றிதழ் இல்லாத விதைகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது.

விதைகளின் விற்பனை விவரம் குறித்த பட்டியலை விதை விற்பனையாளா்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

உரிய அங்கீகாரம் பெறாத அல்லது ஆவணங்கள் இல்லாத விதைகளை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தக்கூடாது. இதனால் ஏதேனும் களப்பிரச்னைகள் ஏற்பட்டால் உரிய நிவாரணம் கோர இயலாத நிலை ஏற்படும்.

விதைச் சட்டத்தை கடைபிடிக்காத விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.