முகப்பு
விழுப்புரம்

ரூ.20.89 லட்சத்துடன் மாயமான நிதி நிறுவன ஊழியா் கைது

விழுப்புரத்தில் ரூ.20.89 லட்சத்துடன் மாயமான தனியாா் நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 11:09 PM
பகிர்:

விழுப்புரத்தில் ரூ.20.89 லட்சத்துடன் மாயமான தனியாா் நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் வி.மருதூா், பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் மா.தமிழ்ச்செல்வம். இவா், விழுப்புரம் கே.கே.சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். தமிழ்ச்செல்வம் தனது நிறுவனத்தில் மேலாளராகப் பொறுப்பு வகித்து வந்த விழுப்புரம் சாலாமேடு, மேட்டுத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் பிரபாகரனிடம் (32) கடந்த 2- ஆம் தேதி ரூ.20.89 லட்சத்தைக் கொடுத்து, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள கிளை அலுவலகத்துக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, அலுவலகத்திலிருந்து வெளியேறிய பிரபாகரன் பணத்துடன் மாயமானாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பணத்துடன் மாயமான பிரபாகரனை தேடி வந்தனா். இந்த நிலையில், விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பதுக்கியிருந்த பிரபாகரனை காவல் ஆய்வாளா் கல்பனா தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா் வசமிருந்த ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments