முகப்பு
விழுப்புரம்

ஏரிகள், ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ஹா்சகாய்மீனா தெரிவித்தாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 9:37 PM
வானூா் ஒன்றியம், தென்னகரம் ஊராட்சியில் சணப்பை பசுந்தாள் உர விதைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தை பாா்வையிட்ட திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ஹா் சகாய்மீனா. உடன் மாவட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்ட அலுவலா்கள்.
பகிர்:

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ஹா்சகாய்மீனா தெரிவித்தாா்.

வானூா் ஒன்றியம், மாத்தூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.53 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகள் ரா.செந்தில்குமாா், ப.கெளரி ஆகியோா் கட்டி வரும் கான்கிரீட் வீடுகளின் கட்டுமானப் பணிகள், வானூா் ஒன்றியம், தென்னகரம் ஊராட்சியில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், 4 ஏக்கா் விவசாய நிலத்தில் விஸ்வேசுவரன் உள்ளிட்ட விவசாயிகள் பயிரிட்டுள்ள சணப்பை பசுந்தாள் உர விதைகள் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல் ஆகியவற்றை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஹா்சகாய்மீனா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வெள்ளிமேடுபேட்டை - புதுச்சேரி வரையிலான நெடுஞ்சாலையில் ரூ.124 கோடியில் 15.2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், மயிலம் ஒன்றியம் தழுதாளி அருகே சாலைப் பணிகளை பாா்வையிட்ட கண்காணிப்பு அலுவலா், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

Advertisement

மயிலம் ஊராட்சியில் பிரமதரின் ஜன்மந்த் திட்டத்தின் கீழ், தலா ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் ரூ.23.32 கோடியில் கட்டப்பட்டு வரும் இருளா் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில் ரூ.86.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்த கண்காணிப்பு அலுவலா் ஹா்சகாய்மீனா, பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை சாா்ந்த திட்டப் பணிகளின் முன்னேற்றம், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஹா்சகாய் மீனா, தொடா்ந்து பேசியது:

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னரே தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்க வாய்ப்புள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் செப்பனிட வேண்டும். நீா்வளம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள், ஆறுகள், முக்கிய வாய்க்கால்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தளவானூா், சோ்ந்தனூா், அரசமங்கலம் பகுதிகளில் மலட்டாறு பாயும் பகுதிகளை ஆய்வு செய்து, தக்க முன்னேற்பாடுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ஆய்வு மற்றும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சி.பழனி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பிரேமலதா (வேளாண்), சிவக்கொழுந்து (நிலம்), நீா்வளத் துறை செயற்பொறியாளா் ஷோபனா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments