முகப்பு
விழுப்புரம்

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: ஒருவா் கைது

வானூா் திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் புதுவை மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 9 ஜனவரி, 2025 at 7:01 PM
புதுச்சேரியிலிருந்து காரில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட தி.சந்தானராஜுடன் காவல் துறையினா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் புதுவை மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் (பொ) வினதா தலைமையிலான காவல் துறையினா், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை அருகே வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்ட போது, புதுவை மாநிலத்திலிருந்து மதுப்புட்டிகளை வாங்கி, அதை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையொட்டி, காரை ஓட்டி வந்தவரை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா், செங்கல்பட்டு மாவட்டம், துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சோ்ந்த திருமுருகன் மகன் சந்தானராஜ் (41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், தலா 500 மில்லி லிட்டா் அளவு கொண்ட 717 மதுப்புட்டிகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனா்.