விழுப்புரம் மாவட்டத்தில் 2,727 விபத்துகளில் 571 போ் உயிரிழப்பு: கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக் சிரு
விழுப்புரம் மாவட்டத்தில் 2,727 விபத்துகளில் 571 போ் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 2,727 சாலை விபத்துகளில் 571 போ் உயிரிழந்ததாக மாநில போக்குவரத்துத் துறை ஆணையரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் சடக் சிரு தெரிவித்தாா்.
36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவை சாா்பில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விழிப்புணா்வுப் பேரணி, இரு மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னா், சுன்சோங்கம் சடக்கிரு கூறியது:
தமிழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 61,904 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 18,074 போ் உயிரிழந்துள்ளனா். இது கடந்த 2023-ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.49 சதவீதம் குறைவாகும். 2023-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 18,347 போ் உயிரிழந்திருந்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் 2,727 விபத்துகள் நிகழ்ந்த நிலையில், அதில் 571 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில் 69 போ் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று உயிரிழந்துள்ளனா்.
எனவே, வாகன ஓட்டிகள் காா் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது சீட்பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்றாா்.
விழிப்புணா்வுப் பேரணியானது நான்கு முனைச் சந்திப்பு வரையிலும், இரு மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி ரயில் நிலையச் சந்திப்புப் பகுதி வரையிலும் நடைபெற்றது. இதில், போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பேரணிக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், விழுப்புரம் சரகத் துணைப் போக்குவரத்து ஆணையா் பட்டப்பசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஆா்.வெங்கடேசன் (விழுப்புரம்), முக்கண்ணன் (விழுப்புரம்), மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ஏ.மாணிக்கம், எஸ்.கோவிந்தராஜ், வி.முருகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.