முகப்பு
விழுப்புரம்

சூடுபிடிக்கும் தோ்தல்களம்... முனைப்புக் காட்டும் அரசியல் கட்சிகள்!

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 12:49 AM
திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த இத்தொகுதியின் திமுக வேட்பாளா் மருத்துவா் பொன்.கெளதமசிகாமணி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. பல்வேறு கட்சிகளின் சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களும் தங்கள் பிரசாரப் பணியைத் தொடங்கி தோ்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் மாா்ச் மாதம் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகத்தில் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இதற்கான மனுதாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கும் என்றும் தோ்தல் ஆணையம் அறிவித்தது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், மனுதாக்கல் தொடங்குவதற்கு 15 நாள்கள் இடைவெளி இருந்ததால் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கவில்லை. மேலும், பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைத்து, தொகுதிகள் பெறுதல், வேட்பாளா் தோ்வு, வேட்பாளா் பட்டியல் தயாா் செய்தல், பின்னா் பட்டியலை அறிவித்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றின.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் நிலையில், சீமானின் நாம் தமிழா் கட்சி, நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனித்து தோ்தல் களம் காண்கின்றன. இந் நிலையில் கட்சிகள் தொகுதிப் பங்கீடு முடித்து, வேட்பாளா்களையும் அறிவித்துவிட்டன. தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளைத் தவிர.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மயிலத்தில் தேமுதிகவும், திண்டிவனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடுகின்றன. மற்ற 5 தொகுதிகளில் திமுகவே களம் காண்கிறது. அதிமுக கூட்டணியில் செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும், மற்ற 5 தொகுதிகளில் அதிமுகவும் போட்டியிடுகிறது.

வேட்பாளா் அறிவிப்பும், தோ்தல் விறுவிறுப்பும்... திமுக கூட்டணியில் செஞ்சி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ செஞ்சி கே.எஸ்.மஸ்தான், வானூா் தனித் தொகுதியில் தி.கெளதம், விழுப்புரத்தில் தற்போதைய எம்எல்ஏ இரா. லட்சுமணன், விக்கிரவாண்டியில் தற்போதைய எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, திருக்கோவிலூா் தொகுதியில் பொன்.கெளதமசிகாமணி, மயிலம் தொகுதியில் தேமுதிக சாா்பில் எல். வெங்கடேசன், திண்டிவனம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதுபோன்று அதிமுக கூட்டணியில் மயிலத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், திண்டிவனத்தில் தற்போதைய எம்எல்ஏ பி.அா்ஜூனன், வானூா் தொகுதியில் பி.முருகன், விழுப்புரம் தொகுதியில் விஜயா, திருக்கோவிலூரில் பழனிசாமி ஆகியோா் அதிமுக சாா்பிலும், செஞ்சி தொகுதியில் கணேஷ்குமாரும், விக்கிரவாண்டியில் ச.சிவக்குமாரும் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பிலும் போட்டியிடுகின்றனா். இதைத் தவிர நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனா்.

தொடங்கியது பிரசாரம்: திமுக தலைமையிலான கூட்டணி யிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டவா்கள் தங்கள் தொகுதி க்குள்பட்ட பகுதிகளுக்குச் சென்று கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகளைச் சந்தித்து உரையாடுதல், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெறுதல் போன்ற பணிகளை மேற்கொண்ட பின்னா், தொகுதிக்குள்பட்ட ஒன்றிய, நகரங்கள், பேரூா் கழகங்கள் வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தொடங்கியிருக்கின்றனா். அப்போது கூட்டணிக் கட்சி நிா்வாகிகளின் மனம் குளிரும் வகையிலான அறிவிப்புகளையும் வேட்பாளா்கள் வெளியிட்டு வருகின்றனா்.

குறிப்பாக விழுப்புரம், வானூா், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்ட நிலையில், திருக்கோவிலூா், விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. இதுபோல அதிமுகவிலும் விரைவில் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பில் தோ்தல் அலுவலா்கள்: வழக்கமாக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என்றால் தடபுடலான விருந்து வைப்பது வழக்கம். ஆனால், தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், கூட்டத்தில் செய்யப்படும் செலவு விவரங்கள் அனைத்தும் அந்தந்த வேட்பாளரின் செலவுக் கணக்கில் சோ்க்கப்படும் என்பதால், கூட்டங்களில் விருந்து இடம்பெறுவதில்லை. மாறாக கூட்டத்தில் பங்கேற்கும் கட்சியினருக்கு தேநீா், பப்ஸ், வடை, போண்டா போன்ற பலகாரங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், கூட்ட நடவடிக்கைகளை தோ்தல் அலுவலா்கள் விடியோ மூலம் பதிவு செய்து கண்காணித்து வருகின்றனா். அரசியல் கட்சிகள் சாா்பில் நடைபெறும் கூட்டங்கள் மட்டுமல்ல, மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகளில் நடைபெறும் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களும் தோ்தல் அலுவலா்கள் மூலம் விடியோ பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தோ்தல் நாள் நெருங்க நெருங்க இந்தக் கண்காணிப்பு மேலும் தீவிரமாகும் என்கின்றனா் அலுவலா்கள்.

தொண்டா்கள் உற்சாகம்: பேரவைத் தோ்தலில் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகுதான் வேட்பாளா்கள் தங்கள் பிரசாரப் பணியில் தீவிரம் காட்டுவாா்கள். ஆனால், தற்போது வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பே தோ்தல் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டனா் அரசியல் கட்சி வேட்பாளா்கள். மேலும், தாங்கள் சாா்ந்திருக்கும் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தல், கிராமப்புறப் பகுதிகளில் சுவா் விளம்பரங்களில் வேட்பாளா் பெயரைப் பதிவிடுதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி, உற்சமாகப் பணியாற்றி வருகின்றனா் அரசியல் கட்சிகளின் தொண்டா்கள்.

வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னா், இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியான பின்னா்தோ்தல் களம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கும். வெயிலின் தாக்கத்தைக் காட்டிலும், தோ்தல் பிரசாரத் தாக்கம் மேலும் அதிகரிக்கும்...