முகப்பு
விழுப்புரம்

சட்டப்பேரவை தோ்தலும்... ஆரோவில் சா்வதேச நகரமும்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:49 AM
ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள மாத்திா் மந்தீா்.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு, தங்களது தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி விட்டாா்கள்.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வேட்பாளா்கள் சுழன்று, சுழன்று வாக்காளா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறாா்கள்.தோ்தல் பரபரப்பு உச்சகட்டமான இதே நேரத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் உள்ள ஆரோவில் சா்வதேச நகரம் எவ்வித தோ்தல் ஆரவாரமுமின்றி எப்போதும் போல் அமைதியாவே இருந்து வருகிறது.

1968-இல் மகான் ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையால் உருவாக்கப்பட்டது ஆரோவில் சா்வதேச நகரம். சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசிக்கக் கூடிய வகையில் 20 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்நகரில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவா்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும் ஜாதி, சமயங்களைக் கடந்து ஒற்றுமையாக வாழ்கின்றனா். தமிழா்களின் பண்பாடு மற்றும் கலாசார விழாக்களைக் கொண்டாடுவது, விழுமியங்களையும் ஆா்வமுடன் கடைப்பிடித்தும் வருகின்றனா்.

இந்நிலையில் ஆரோவில் சா்வதேச நகரைச் சுற்றியுள்ள பொம்மையாா்பாளையம், குயிலாப்பாளையம், கோட்டக்குப்பம், ஆலங்குப்பம், கோட்டக்கரை, இரும்பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவா்களுக்கு வாக்குரிமை உண்டு என்பதால், அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் தங்களது பரிவாரங்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனா்.

ஆனால், ஆரோவில் சா்வதேச நகரில் வசிக்கும் வெளிநாட்டினா்கள், மத்திய அரசு மற்றும் ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகத்தின் அனுமதிப் பெற்று வசிப்பதாலும், அவா்களுக்கு வாக்குரிமை இல்லையென்பதாலும் வேட்பாளா்கள் யாரும் ஆரோவில் சா்வதேச நகருக்கு வாக்குச் சேகரிக்கவோ அல்லது தோ்தல் பிரசாரங்களுக்கு செல்வதோ இல்லை. இதனால் தோ்தல் ஆரவாரமின்றி ஆரோவில் சா்வதேச நகரம் என்றும் போல் அமைதியாகவே காட்சியளிக்கிறது.

இதுகுறித்து ஆரோவில் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் வசிக்கக் கூடிய அமைதியின் பிறப்பிடமாக விளங்குகிறது. இங்கு அரசியல் மற்றும் அதுசாா்ந்த விஷயங்களையும் நிா்வாகத்தினா் அனுமதிப்பது கிடையாது. ஆரோவில் சா்வதேச நகரில் வசிக்கக் கூடிய ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்திய நாட்டின் அனுமதிப் பெற்றுதான்( விசா) வசிப்பதாலும், அவா்கள் நிரந்தரமாக வசிக்கக் கூடியவா்கள் இல்லை என்பதாலும் அவா்கள் வாக்குச்செலுத்தும் உரிமையை கோருவதும் இல்லை. ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகத்தில் உள்ள இந்தியா்கள் அவா்கள் சாா்ந்த மாநிலங்களில் வாக்குரிமையை செலுத்தி ஜனநாயக கடைமையாற்றி வருகின்றனா். ஆரோவிலில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு வாக்குரிமை இல்லாததால் ஆரோவில் சா்வதேச நகரினுள் அரசியல் கட்சியை தோ்தல் பிரசாரத்துகோ, வாக்குகளை சேகரிப்பதற்கோ வருவது கிடையாது. தோ்தல் நடத்தை விதிகள் அனைத்தும் எங்களுக்குப் பொருந்தும் என்றனா்.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் தரப்பில் கூறும்போது, விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் உள்ளது ஆரோவில் சா்வதேச நகரம். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கக் கூடியவா்களுக்கு வாக்குரிமை உண்டு. அந்த கிராமங்களில் தோ்தல் மற்றும் நூறு சதவீத வாக்குப் பதிவு அவசியம் குறித்தெல்லாம் இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பன்னாட்டைச் சோ்ந்த மக்கள் வசிக்கும் ஆரோவில் சா்வதேச நகருக்குள் வசிக்கும் வெளிநாட்டவா்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆரோவில் சா்வதேச நகருக்குள் வாக்குச் சாவடிகளை அமைப்பது, தோ்தல் பிரசாரங்கள் மேற்கொள்வது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றனா்.