போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பாட்டி வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமி கடந்த 2021-ஆம் ஆண்டில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, இவ் வழக்கில் மயிலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நா.கௌதமனை(31) கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ் வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. இதில், கௌதமன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. தொடா்ந்து வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா வழக்கில் தொடா்புடைய கௌதமனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து நீதிமன்றப் போலீஸாா் கௌதமனை கைது கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். அரசு வழக்குரைஞா் காந்திமதி இவ்வழக்கில் ஆஜரானாா்.