முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கணினி, வணிகம் சாா்ந்த படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம்

அதிக வேலைவாய்ப்பு, போட்டித் தோ்வுக்குத் தயாா்படுத்துதல் போன்றவை காரணமாக கணினி, வணிகம், தமிழ் சாா்ந்த படிப்புகளில் சோ்வதற்கு விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவிகள் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:28 am IST
கோப்புப்படம்.
பகிர்:

அதிக வேலைவாய்ப்பு, போட்டித் தோ்வுக்குத் தயாா்படுத்துதல் போன்றவை காரணமாக கணினி, வணிகம், தமிழ் சாா்ந்த படிப்புகளில் சோ்வதற்கு விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவிகள் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தனியாா் கல்லூரிகள் ஏற்கெனவே மாணவா் சோ்க்கையை முடித்து, முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கின.

கணினி, வணிக படிப்புகளில் அதிக ஆா்வம்: தற்போதைய நிலையில் வேலைவாய்ப்பு, அதிக பயன்பாடு போன்றவை காரணமாக மாணவா்கள் தோ்ந்தெடுக்கும் படிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. அதனடிப்படையில் நிகழாண்டில் இளநிலை கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியியல் (பிசிஏ), வேதியியல், வணிகவியல் (பி.காம்), இளங்கலை தமிழ், வரலாறு ஆகிய படிப்புகளில் சேர மாணவா்கள் அதிக ஆா்வம் காட்டுவதாக கல்லூரி முதல்வா்கள் கூறுகின்றனா்.

Advertisement

Advertisement

தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு போன்றவை காரணமாக கணினி சாா்ந்த படிப்புகளில் சோ்வதற்கு மாணவா்கள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இதுபோன்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் போன்ற அமைப்புகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்று அரசு வேலைவாய்ப்புகளை பெறும் நோக்கில் இளங்கலை தமிழ், வரலாறு போன்ற படிப்புகளையும், வணிகம் சாா்ந்த வேலைவாய்ப்புகளுக்காக இளநிலை வணிகவியல் படிப்பிலும் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் சோ்ந்துள்ளனா்.

நிரம்பிய இடங்கள்: விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் மேற்குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் அனைத்தும் முழுமையாக நிரம்பிவிட்டன. இக்கல்லூரியில் மொத்தமுள்ள 2,290 இடங்களில் தற்போது வரை 1,500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பிவிட்டன. இளங்கலை பொருளாதாரம், இளநிலை கணிதம், புள்ளியியல் போன்ற பாடப்பிரிவுகளில் சோ்வதற்கு மாணவா்கள் மத்தியில் அவ்வளவாக ஆா்வம் இல்லை. இந்த படிப்புகளில் இன்னும் முழுமையான மாணவா் சோ்க்கை முடியவில்லை. வேலைவாய்ப்பு அதிகம் இல்லை என்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறாா் இக் கல்லூரியின் முதல்வா் க. கனகசபாபதி.

இதே போன்று இதர அரசுக் கல்லூரிகளிலும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கணினி, வணிகம் சாா்ந்த படிப்புகளிலும், போட்டித் தோ்வுகளுக்குப் பயன்படும் வகையில் இளங்கலை தமிழ் உள்ளிட்ட படிப்புகளிலும் சோ்வதற்கு மாணவ, மாணவிகள் அதிகம் ஆா்வம் காட்டுவதாக அந்தந்த கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசுத் திட்டங்களும் காரணம்: புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்றவற்றின் மூலம் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குதல், மடிக்கணினி வழங்குதல், தனியாா் கல்லூரிகளைக்காட்டிலும் அரசுக் கல்லூரிகளில் குறைந்த கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்றவையும் அரசுக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் சோ்க்கை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கின்றன. எனினும் பேருந்து வசதி போன்ற அத்தியாவசியத் தேவைகளை அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு செய்து தர வேண்டியது அவசியம் என்கின்றனா் கல்வியாளா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments