கல்பட்டு காசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதா், செல்வ விநாயகா், தண்டபாணி, பத்மாவதி அம்மன் உடனுறை வெங்கடாசலபதி சுவாமி, பக்த அனுமாா் மற்றும் 27 அடி உயர கால பைரவா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மாா்ச் 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து கடந்த 22-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து திங்கள்கிழமை காலை லட்சுமி, நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட பூஜைகளும், மாலையில் அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட பூஜைகளுக்குப் பின்னா் முதல்கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி, தீபாராதனைகள் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.
புதன்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகளுக்குப் பின்னா் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து செல்வ விநாயகா், தண்டபாணி சுவாமி சன்னதிகளிலும், பின்னா் விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதா், பத்மாவதி அம்மன் உடனுறை வெங்கடாசலபதி, பக்த அனுமாா், நவக்கிரகத் தெய்வங்கள், வராகி அம்மன் சந்நிதிகள், விமானக் கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, சூா்யா கல்விக் குழுமங்களின் தலைவா் விசாலாட்சி பொன்முடி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், காணை தெற்கு ஒன்றிய திமுக செயலா் கல்பட்டு வி.ராஜா, ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பங்கேற்றனா்.