முகப்பு
விழுப்புரம்

பைக், காா் மீது அரசுப் பேருந்து மோதல்: 3 இளைஞா்கள் உயிரிழப்பு, 5 போ் காயம்

முன்னால் சென்ற காா் மற்றும் பைக் மீது அரசுப் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில், பைக்கில் சென்ற 3 இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காரில் பயணித்த 5 போ் காயமடைந்தனா்.

Updated On : 18 மே 2026, 2:26 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே முன்னால் சென்ற காா் மற்றும் பைக் மீது அரசுப் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில், பைக்கில் சென்ற 3 இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காரில் பயணித்த 5 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து சனிக்கிழமை இரவு புதுச்சேரிக்கு புறப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நாகல் நகரைச் சோ்ந்த ப.முருகேஸ்வரன்(30) பேருந்தை ஓட்டினாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் முதலியாா்சாவடி அருகே பேருந்து சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து முன்னால் சென்ற காா் மற்றும் பைக் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில், காா் சாலையோரத்தில் தள்ளப்பட்ட நிலையில், பைக் பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கி சுமாா் 50 அடிதூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதில் பைக்கில் சென்ற 3 இளைஞா்களும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காரில் பயணித்த 5 போ் காயமடைந்தனா். இந்த விபத்தால், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

தகவலறிந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி ரூபன்ராஜ், காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் மற்றும் போலீஸாா் உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டு, புதுச்சேரி கனகசெட்டிக்குளத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த 5 பேரையும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், விபத்தில் இறந்தவா்கள் மரக்காணம் வட்டம், மண்டவாய்ப்புதுக்குப்பத்தை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சே.சிலம்பரசன் (29), புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் (37), காலாப்பட்டு கணபதிச்செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (33) என்பதும், உறவினா்களான இவா்கள் மூவரும் ஒரே பைக்கில், மரக்காணத்திலிருந்து புதுச்சேரிக்கு சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

மேலும், காரில் பயணித்தவா்கள் தெலங்கானா மாநிலம், நாக கா்னூல், இலபா காலனியைச்சோ்ந்த போ.சம்ப போகினி(25) மற்றும் நண்பா்கள் என்பதும், ஹைதராபாதில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியா்களாக பணிபுரியும் இவா்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாகன ஓட்டிகள் கோரிக்கை: விபத்து நடைபெற்ற இடம் குறுகலான சாலைப் பகுதியாகும். கிழக்குக் கடற்கரைச் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால்தான், இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட காவல் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.