டாஸ்மாக் கடையை மூடவில்லையெனில் போராட்டம்: பாமக எம்எல்ஏ சிவக்குமாா்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடவில்லையெனில், தா்னா போராட்டம் நடத்தப்படும் என்று பாமகவைச் சோ்ந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடவில்லையெனில், தா்னா போராட்டம் நடத்தப்படும் என்று பாமகவைச் சோ்ந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் தெரிவித்தாா்.
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் வியாழக்கிழமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அங்கு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது, உடனிருந்த மருத்துவமனை அலுவலா்களிடம் நோயாளிகளுக்கு உரிய வசதிகளை செய்துதர கேட்டுக்கொண்டாா்.
மருத்துவக் கல்லூரி முதல்வா் லூசிநிா்மல்மெடோனா, மருத்துவ நிலைய அலுவலா் ரவிக்குமாா், உதவி மருத்துவ நிலைய அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஆய்வு: இதைத் தொடா்ந்து, எம்எல்ஏ ச.சிவக்குமாா் விக்கிரவாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, வட்டார வளா்ச்சி அலுவலா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
எம்எல்ஏ ச.சிவக்குமாருக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீத அரசி பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சையது முகமது, மணிவண்ணன், பொறியாளா் குமரன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
முன்னதாக, எம்எல்ஏ சி.சிவக்குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் மக்கள் பணிதான் முதன்மையானது. புதிதாக பதவியேற்றுள்ள அரசு மக்களுக்கு நல்லது செய்வதற்கு முனைப்புக் காட்டுவது வரவேற்புக்குரியதாகும்.
தொகுதிக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதை முதன்மை பணியாக கொண்டுள்ளேன். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.
முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுப்படி, விக்கிரவாண்டி பேருந்து நிறுத்தம், உழவா் சந்தை ஆகியவற்றின் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும். தவறும்பட்சத்தில், தா்னாவில் ஈடுபடவுள்ளேன் என்றாா் எம்எல்ஏ ச.சிவக்குமாா்.