தனித் தொகுதிகளில் அதிகளவில் பெண்கள்!
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 29 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வேட்பாளர்களில்
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 29 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வேட்பாளர்களில் இது தோராயமாக 13 சதவீதமாகும். ஆனால், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளில் மட்டும் அந்தக் கட்சியில் 11 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
மலைவாழ் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தனித் தொகுதிகளையும் சேர்த்துப் பார்த்தால், தமிழகத்தில் உள்ள தனித் தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் 46. அதாவது, அதிமுக சார்பில் 46 தனித் தொகுதிகளில் 11 பெண்கள் போட்டியிடுகின்றனர். இது தோராயமாக 24 சதவீதமாகும். தனித் தொகுதிகளை தவிர்த்துப் பார்த்தால், அதிமுக போட்டியிடும் பொதுத் தொகுதிகளில் 18 பெண்கள் போட்டியிடுகின்றனர். இது வெறும் 9 சதவீதமேயாகும்.
இன்னொரு பிரதான கட்சியான திமுக தான் போட்டியிடும் 174 தொகுதிகளில் மொத்தமாக 18 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இந்த 18 பெண் வேட்பாளர்களில் 8 பேர் தனித் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மிகக் குறைவாகவே பெண்களுக்கு கட்சிகள் வழங்குகின்றன. ஆனால், அந்தக் கட்சிகள் ஏன் அதிகளவில் பெண்களை தனித் தொகுதிகளில் நிறுத்துகிறார்கள்? பொதுத் தொகுதியில் போட்டியிடும் பெண்களின் சதவீதத்தைவிடத் தனித் தொகுதிகளில் போட்டியிடும் பெண்களின் சதவீதம் மிக மிக அதிகமாக உள்ளதே?
இதுதொடர்பாக திமுக சிறுபான்மையினர் அணி மாநிலத் துணைச் செயலாளர் புதுகை அப்துல்லா கூறியதாவது:
1996-இல் கருணாநிதியின் ஆட்சியில் தமிழகத்தில் உள்ள தனித் தொகுதிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதனால், தனித் தொகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் அரசியல் ஆதிக்கம் ஏற்பட்டது. தனித் தொகுதிகளில் தலித் மக்கள், சாதியக் கட்டமைப்பு உருவான ஆரம்ப காலம் தொட்டே, ஆண்களும் பெண்களும் விவசாய வேலைகள் மற்றும் பிற பணிகளை இணைந்தே செய்தனர். முழு நேர இல்லத்தரசி என்ற கருத்தியல் தலித் மக்களிடம் இல்லை. எனவே, மரபு ரீதியாகவே ஆண்களால் செய்யக் கூடிய எந்தவொரு பணியையும் பெண்களாலும் செய்ய முடியும் என்ற இயல்பான எண்ணம் அவர்களிடம் உண்டு.
ஆனால், பொதுத் தொகுதியை எடுத்துக் கொண்டால், அங்கே பெண்களைவிட ஆண்கள் அதிகளவில் கல்வி கற்றவர்களாக இருப்பார்கள். இதனால் அங்கே, அரசியலில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது. பெண்கள் வீட்டிற்கு வெளியில் வந்து பணி செய்வது கடந்த பத்தாண்டுகளில்தான் அதிகரித்துள்ளது. பொதுத் தொகுதியில் நிலவும் ஆணாதிக்க மனோபாவமானது, பெண்கள் அரசியலுக்கு வருவதையே தவறாகத்தான் பார்க்கிறது. எந்தவொரு பொதுத் தொகுதியிலும் பாலின சமத்துவம் குறைவாகவே காணப்படும். அங்கே, உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் பெண்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணவிடலாம்.
எந்தவொரு கட்சியின் சார்பிலும் பொதுத் தொகுதி ஒன்றில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற பேச்சு எழும் போது, அங்குள்ள தோராயமான போட்டி வேட்பாளர் பட்டியலில் உள்ள பெண்களின் அளவு மிகக் குறைவாகவே காணப்படும். இதனால்தான், தனித் தொகுதிகளில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றார் அவர். தலித் ஆண்களுக்கு அதிகாரத்தின் நிழல் போய்விடக் கூடாது என பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த முடிவை எடுக்கின்றன எனக் குற்றம்சாட்டுகிறார், தலித்துகளுக்காகப் போராடும் எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
தனித் தொகுதிகளில் பெண்களுக்கு அதிகளவில் போட்டியிட வாய்ப்புக் கொடுப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், பொதுத் தொகுதியில் பெண்களுக்கான வாய்ப்புகள் ஏன் மறுக்கப்படுகின்றன? பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டிருந்தால், பொதுத் தொகுதிகளிலும் அல்லவா பெண்களைப் போட்டியிட அனுமதித்திருக்க வேண்டும். தலித் ஆண்களுக்கு அதிகாரம் போய்விடக் கூடாது என்பதுதான் ஒரே நோக்கம் என்றார் அவர்.
"தலித் மக்கள், பெண்களைத் தலைவர்களாக எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். தலித் மக்களிடையே ஆணாதிக்க மனோபாவம் குறைவாகவே காணப்படுகின்றன. சமூக அடிப்படையில் புறக்கணிக்கப்படும் தலித் ஆண்கள், பாலின அடிப்படையில் புறக்கணிக்கப்படும் பெண்களின் உணர்வுகளை இலகுவாகப் புரிந்து கொள்கிறார்கள். இதனால்தான், தலித்துகள் இடையே பெண் வேட்பாளர்கள் அதிகளவில் சாத்தியமாகின்றன' என்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்த சுகி.
"பெரும்பாலும் பிரதான கட்சிகள், வெற்றி வாய்ப்புகள் குறைவாக உள்ள தனித் தொகுதிகளில்தான் பெண்களை களமிறக்குகின்றன. இதன்மூலம், பெண்களுக்கு இடம் கொடுத்தது போல ஒரு தோற்றத்தைக் கொடுக்கும் அதேநேரத்தில், அவர்கள் போட்டியிடுவதால் அதிகளவில் பணம் செலவு செய்ய வேண்டிய தேவையும் இல்லை என பிரதான கட்சிகள் கணக்குப் போடுகின்றன' என்கிறார் வழக்குரைஞர் அஜிதா. "தனித் தொகுதிகளில் உள்ள கள நிலவரங்களை, ஆண்களைவிட பெண்கள்தான் அதிகளவில் அறிந்து வைத்துள்ளனர். பெண்களால்தான் எங்களது பிரச்னைகளை தீர்த்துவைக்க முடியும். தனித் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை வரவேற்கிறோம்' என்றார் திரு.வி.க. தனித் தொகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவி லட்சுமி.
தனித் தொகுதிகளில் பெண்களைப் போட்டியிட வைப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், தனித் தொகுதியில் மட்டும் என்றில்லாமல், அனைத்துத் தொகுதிகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான், பாலின சமத்துவம் அரசியலில் நிலைபெறும் என்கின்றனர் பெண்கள்.