ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன. இன்னும் புத்திரபாக்கியம் கிட்டவில்லை. என் மகள், மருமகன் ஜாதகங்களின்படி எப்போது குழந்தை பிறக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர்

தினமணி

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்னம் என்கிற உயிர் ஸ்தானத்திற்கும் சுக ஸ்தானம் என்கிற நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) நீச்சம் பெற்று நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். நீச்சன் எங்கு உச்சமடைவாரோ, அந்த வீட்டுக்கதிபதி லக்ன கேந்திரத்திலோ சந்திர கேந்திரத்திலோ அமர்ந்திருந்தால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்பது ஒரு விதி. அதாவது நீச்சபங்க ராஜயோகத்திற்குக் கொடுக்கப்பட்ட பல விதிகளில் இதுவும் ஒன்று. இங்கு கடக ராசியில் குருபகவான் உச்சம் பெறுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சந்திரபகவான் எங்கு அமர்ந்திருந்தாலும் அவர் இருக்குமிடம் சந்திரகேந்திரமாக ஆகிவிடுமல்லவா? அதனால் குருபகவான் நீச்சம் பெற்றால் மேற்கூறிய விதியின்படி நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிவிடும். மற்றபடி, விதிகள் அமைந்தாலும் அமையாவிட்டாலும் குருபகவானுக்கு இயற்கையிலேயே நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிவிடும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
 பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் ஆட்சி பெறுகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் லக்னாதிபதியான குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) நீச்சம் பெற்று நவாம்சத்தில் மேஷ ராசியை அடைந்து உச்சம் பெறுகிறார். ராசியில் நீச்சம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்பது விதி. இதனடிப்படையில் பார்த்தால் சூரியபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. மேலும் நீச்சனேறிய ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெறுகையில் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்பது முதல் விதி. சூரியபகவான் நீச்சம் பெற்று அமர்ந்திருக்கும் துலாம் ராசியிலேயே அந்த வீட்டுக்கதிபதியான சுக்கிரபகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இந்த விதியின் அடிப்படையிலும் சூரியபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது.
 குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுயசாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்திலேயே செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் நிலை) ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் ராகுபகவான் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். கேதுபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
 உங்கள் மருமகனுக்கு மேஷ லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று நவாம்சத்தில் மகர ராசியை அடைந்து உச்சம் பெறுகிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். பாக்கியாதிபதியான குருபகவானும் கர்மாதிபதியான சனிபகவானும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்து சுகாதிபதியான சந்திரபகவானால் பார்க்கப்படுகிறார்கள். சுக்கிரபகவான் தனம், வாக்கு, குடும்பம் ஸ்தானமான இரண்டாம் வீட்டிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். சுகஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுபகவான் அமர்ந்திருக்கிறார்.
 புத்திர பாக்கியத்திற்கு ஐந்தாம் வீடும் ஐந்தாமதிபதியும் சுபத்தன்மையுடன் இருக்க வேண்டும். இதற்குப்பிறகு லக்னாதிபதி, சுக்கிரபகவான், செவ்வாய்பகவான், குருபகவான் ஆகியோரும் சுப பலம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சர்ப்பக் கிரகங்களும் சுபத் தன்மையை பெற்றிருப்பது புத்திர பாக்கியம் சீராக அமைய வழிவகுக்கும்.
 உங்கள் மகளுக்கு புத்திர ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்திருக்கிறார். புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய்பகவான் ராசியிலும் நவாம்சத்திலும் பலமாக இருக்கிறார். புத்திர ஸ்தானத்தை பாக்கியாதிபதியான சூரியபகவான் சுக்கிரபகவான் மற்றும் கேதுபகவான்கள் பார்வை செய்கிறார்கள். இதில் சூரிய சுக்கிர பகவான்களின் பார்வை நலமாகும். இப்படி நிறை குறை என்று போட்டுப் பார்த்து, நிறை கூடுதலா, குறை கூடுதலா என்று பார்க்க வேண்டும். நிறை கூடுதலாக இருந்தால் உடனடியாக புத்திர பாக்கியம் உண்டாகுமென்றும் குறை கூடுதலாக இருந்தால் தாமதமாக புத்திர பாக்கியம் உண்டாகுமென்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு தசா புக்திகளும் சாதகமாக நடக்கும் காலத்தில் கர்ப்பம் தரிக்கும். கோசாரத்தில் குரு, சுக்கிர, செவ்வாய், ராகு- கேது பகவான்கள் நல்ல இடங்களில் சஞ்சரிப்பது மேலும் நன்மையாகும்.
 உங்கள் மகளுக்கு தற்சமயம், சந்திரமஹா தசையில் லக்னாதிபதியான குருபகவானின் புக்தி நடக்கிறது. உங்கள் மருமகனுக்கு தற்சமயம் சனி மஹாதசையில் ராகுபகவானின் புக்தி நடக்கிறது. உங்கள் மகளுக்கு லக்னத்திற்கு 24 பரல்களும் ஐந்தாம் வீட்டிற்கு 26 பரல்களும் உள்ளன. உங்கள் மருமகனுக்கு லக்னத்திற்கு 36 பரல்களும் ஐந்தாம் வீட்டிற்கு 18 பரல்களும் கிடைக்கின்றன. இப்படி பல விஷயங்களைச் சீர்தூக்கி ஆராய்ந்து புத்திர பாக்கியம் உண்டாகும் காலகட்டத்தை அறிய முற்பட வேண்டும். அதிக பரல்கள் உள்ள ராசியில் குருபகவான் கோசாரப்படி சஞ்சரிக்கும் காலத்தில் சுலபமாக புத்திரபாக்கியம் கிடைக்கும் என்றும் கூற வேண்டும். அனைத்து ராசி பரல்களையும் லக்னத்தின் பரல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
 பொதுவாக, எந்த ஒரு ராசிக்கும் இருபதுக்கும் மேல் பரல்கள் கிடைத்தால் அந்த ராசியை பலமாக இருப்பதாக கருத வேண்டும். அவர்கள் இருவரின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகும். சூரியன், செவ்வாய், குரு ஆகிய ராஜ கிரகங்கள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் அமர்ந்து இருந்தால் ஆண் மகவு பிறக்க வாய்ப்புண்டாகும். அவர்கள் இருவருக்கும் இந்த மூன்று கிரகங்களும் யோக காரகர்களாக வருவதும் அவர்களில் இருவர் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்றிருப்பதாலும் ஆண் குழந்தை பாக்கியம் உண்டு.
 ராகுபகவானுக்காக துர்க்கையை வழிபட்டு வரவும். சந்தான கோபால கிருஷ்ண ஜபம் அல்லது ஹோமம் செய்யலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT